கெட்டுப்போன ரத்தம்! 15 நிறை மாத கர்ப்பிணிகள் அடுத்தடுத்து பலி! அதிர வைக்கும் காரணத்தை வெளியிட்ட டாக்டர்கள்!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.


கெட்டுப்போன இரத்தம் செலுத்தப்பட்டதால் 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் பலி. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு சீர்குலைவே காரணம். இந் நிகழ்வுக்கு தார்மீகப் பொறுப்பேற்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இது தொடர்பாக பேசியதாவது! தருமபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 15 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே ,சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று உள்ள இரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய நிகழ்வு தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கியது. இந்நிலையில் கெட்டுப்போன இரத்தத்தை செலுத்தியதால் 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் இறந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு செயலிழப்பே இதற்கு மிக முக்கியக் காரணமாகும். # தமிழக அரசின் இரத்த வங்கிகள் , இரத்தப் பரிசோதனை நிலையங்களின் சேவைகள் தரமானதாக இல்லை. # பரிசோதனைக்கு வழங்கப்படும் கிட்டுகள்(kits) தரமானதாக இல்லை.

இரத்த வங்கிகள், இரத்தப் பரிசோதனை நிலையங்கள் நவீன தொழில் நுட்பம் கொண்டதாக இல்லை.  இரத்தம் பொருந்துகிறதா என்பதை பரிசோதிக்க நவீன தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எச்.ஐ.வி கிருமி தொற்று இருக்கிறதா என்பதை  கண்டறிய, நவீன நியூக்ளிக் அமில பரிசோதனைகள் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை.

 இரத்த வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் நடைமுறை படுத்தப் படவில்லை.  தேசிய இரத்தம் ஏற்றுதல்  கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படை யில் இரத்தவங்கிகளில் மருத்துவர்கள்,ஆய்வக நுட்பனர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

ஒப்பந்தம் மற்றும் வெளிகொணர்தல் முறையிலான பணிநியமனங்கள், தரமான சேவையை அளித்தலில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. இரத்த வங்கிகளை முறையாக கண்காணிக்கும் ஏற்பாடு இல்லை.  இரத்தம் செலுத்துதல் மருத்துவத்தில்( transfusion medicine) பயிற்சி பெற்ற மருத்துவர்களை இரத்தவங்கிகளில் பணிநியமன் செய்யவில்லை.

 இரத்தக் கூறுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முழுமையான இரத்தத்தை பயன்படுத்தும் முறை அதிக அளவில் தொடர்கிறது. இரத்தத்தை செலுத்துவதற்கு முன்பாக ,எச்.ஐ.வி /மஞ்சட்காமாலை பி போன்றவற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்சனைகளே இந்நிகழ்வுகளுக்குக் காரணம். 

எனவே,இரத்தம் செலுத்துவதற்கான தமிழக அரசின் 2018 ஆம் ஆண்டின்," மாநில இரத்தக் கொள்கை மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறை (State Blood Policy and Implementation frame work) ஐ நடைமுறைப் படுத்த வேண்டும். இரத்த சோகை சிகிச்சையை அறிவியல் ரீதியாக முறைப்படுத்த வேண்டும். அவசியமின்றி இரத்தம் செலுத்தப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைப்பு சீர்குலைவிற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்ய வேண்டும். # இந்நிகழ்வுகள் குறித்து ,எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்டு நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மெத்தனப் போக்கால் ,இறந்துவிட்ட கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்திற்கு தலா , ரூ 1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும்.