துக்ளக் பத்திரிகை எதற்கு ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? சோவுக்கு கருணாநிதி, குருமூர்த்திக்கு சசிகலா!

துக்ளக் பத்திரிகை 50வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய விவகாரம் காரசாரமாகியிருக்கிறது.


ஆம், தமிழகத்தை தி.மு.க. ஆண்ட நேரத்தில், அதன் அராஜகம் அதிகமாக இருந்தது, அதை அழிக்கவே துக்ளக் பத்திரிகை தோன்றியது என்ற ரீதியில் பேசியிருக்கிறார் குருமூர்த்தி. அவர் பேசியதில் குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே. ‘‘தமிழகம் இருண்ட காலத்தில் இருந்தபோது பிரிவினைவாதம் மறைமுகமாகவும், நேரடியாகவும் தலைவிரித்து ஆடிய காலத்தில், அவற்றை திசை திருப்புவதற்காகவும், அதனை எதிர்த்து மக்களின் சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவும் துக்ளக் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் அப்போது திமுக கலை விழா என்ற பெயரில், பெண்களின் உடைகளைக் களையும் ஆபாச நடனங்களை அரங்கேற்றி வந்தது. தமிழகத்தை இந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவும், சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட துக்ளக் 50 ஆண்டுகளைக் கடந்து சரித்திரம் படைத்திருக்கிறது.

சோவுக்குப் பிறகு நான்தான் ஆசிரியராக வேண்டும் என சோவே பல முறை என்னிடம் வலியுறுத்தி, அதனை நான் ஏற்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, சோவின் மறைவு என அடுத்தடுத்து துயரங்கள் நிகழ்ந்து, தமிழகத்தில் அதிமுக தலைமைக்கு யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், மக்களே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமை அ.தி.மு.க.வில் அமைவதை விரும்பாத சூழலில் ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்றேன்.

சோவுக்கு கருணாநிதி எப்படி துக்ளக் விற்பனைக்கு பயன்பட்டாரோ, அதேபோல எனக்கு சசிகலாவின் எதிர்ப்பு என்பது துக்ளக் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தது. சோ தனக்குக் கிடைத்த புகழை நாட்டுக்காகவும், தர்மத்துக்காகவும், தெய்வீகத்துக்காகவும், தமிழகத்துக்காகவும், கலாசாரத்துக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் மட்டுமே பயன்டுத்தினார். 

அவரால் எழுத்தாளராக உருவாக்கப்பட்டவன் நான். பொருளாதார உண்மை நிலை குறித்து தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தத் தமிழில் கட்டுரை எழுதுமாறு பணித்தார். அவசரக் காலத்திலும் புனைப்பெயரில் கட்டுரை எழுதக் கூறினார். இந்த வகையில் எழுதத் தொடங்கிய நான் இப்போது துக்ளக் ஆசிரியராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

1979-ம் ஆண்டிலேயே ஆடிட்டர் பணியை விட்டுவிட்டேன். இன்னமும் என்னை ஆடிட்டர் என்றே பலரும் அழைக்கின்றனர். துக்ளக் ஆசிரியர் என அழைப்பதையே பெருமைப்படுகிறேன்.

நடிகராக இருந்து பத்திரிகை தொடங்கியபோது, சோவையே நடிகர் என்றுதான் பலரும் அழைத்து வந்தனர். பத்திரிகையாளர் என்று அழைப்பதையே அவர் பெருமையாகக் கொண்டிருந்தார். இன்று படிப்பதே குறைந்துவிட்ட நிலையில், லட்சக்கணக்கான வாசகர்களிடம் துக்ளக்கை கொண்டு சோத்திருப்பதற்கு சோ மட்டுமே காரணம்’’ என்று கூறியுள்ளார் குருமூர்த்தி.