காஷ்மீர் விவகாரத்தில் மோடி திடீரென அவசரப்பட்டது ஏன் தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு, ‘காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்துவைக்க அமெரிக்க தயார்’ என்ற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.


உடனே இந்தியா கடும் எதிர் விளைவு காட்டவே, அப்படி சொல்லவில்லை என்று பல்டி அடித்தார் டிரம்ப். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்று ட்ரம்ப்பை சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் அதே செய்தியை மீண்டும் வெளியிட்டார்.

அதன்பிறகு, காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய இம்ரான்கான் ஒத்துக் கொண்டதாகக் கூறினார், ட்ரம்ப். இந்த செய்தி தேவையே இல்லாமல் சர்வதேச தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப காட்டப் பட்டு வந்தன. அது ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதாவது, காஷ்மீர் பிரச்சினையில் தேவையே இல்லாமல் மூக்கை நுழைப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது தெரிந்தது.

அதுதான் இந்தியாவுக்கு எழுந்த சந்தேகத்துக்குக் காரணம். அமெரிக்காவின் இந்த திடீர் ஆர்வத்தை வேறு ஒரு பிரச்சினையோடு ஒப்பிட்டு பார்த்தது இந்தியா. சில மாதங்களுகு முன்னால் இந்திய அரசு சிறுபாண்மை மதங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். அதுதான் அந்த பிரச்சினை.

ட்ரம்பின் இந்தியா மீது குற்றம் சாட்டும் அந்த மன நிலையோடு மத்தியஸ்தம் செய்வதற்கான தற்போதைய அவரது திடீர் ஆர்வத்தை ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்தியவுக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. அதாவது, அமெரிக்காவின் இந்த ஆர்வத்தில் ஏதோ ஓர் உள் நோக்கம் இருக்கிறது என்பதை இந்தியா புரிந்து கொண்டது.

இம்ரான்கானும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சியை இந்தியாவால் தடுக்க முடியாது. அப்படி அமெரிக்கா நடுவராக உள்ளே வந்தால் காஷ்மீர் பிரச்சினை முழுமையாக இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும். இறுதி முடிவை அமெரிக்காவே எடுக்கும் நிலை உருவாகி விடும்.

அப்படி ஒரு நிலை உருவானால் அமெரிக்கா காஷ்மீர் மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்க வேண்டி வரும். அதாவது, காஷ்மீர் மக்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி, பிறகு அதன் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்கிற காஷ்மீரிகளின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்க வேண்டி வரலாம். காஷ்மீரிகளின் அந்த கோரிக்கையை ஏற்கும்படி பாகிஸ்தானும் அமெரிக்காவை நிர்ப்பந்திக்கலாம்.

அந்த ஒரு இக்கட்டான நிலையில் அமெரிக்கா அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அது இந்தியாவுக்கு பாதகமாக போய்விடும். ஏன் என்றால் காஷ்மீரிகள் பாகிஸ்தானோடு செல்வதையே விரும்புவார்கள். இந்த அபாயத்தை உணர்ந்துதான் இந்திய அரசு வேக வேகமாக காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் விதி எண் 370 ரத்து செய்து காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இது உண்மையா அல்லது இந்தியர்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் கட்டுக்கதையா என்பதை பா.ஜ.க.தான் சொல்ல வேண்டும்.