பெரியாரின் கடைசி பேச்சு என்ன தெரியுமா? பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்த கருணாநிதி!

இன்று பெரியாரின் பிறந்த தினம். அவர் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார். அவர் கடைசியாக பேசியது எங்கே, என்னவென்று தெரியுமா?


1973, டிசம்பர் 19-ம் நாள், தியாகராய நகர்ப் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், “வாழ்ந்தால் இழிவை அறவே ஒழித்து வாழவேண்டும். இல்லையென்றால் செத்து மடியவேண்டும்” என்று முழக்கமிட்டார். இதுதான் பெரியார் அவர்கள் கடைசியாகப் பேசிய மேடைப்பேச்சு.

பெரியார், தனது 80 வயதுக்குப் பிறகு நடப்பதற்கே சிரமப்பட்டார். சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட கோளாறு மற்றும் குடலிறக்க நோய் போன்றவற்றால் துன்பமுற்றார். சிறுநிர் வெளியேறாததால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு ரப்பர் குழாய் பொருத்தி சிறுநீரை வெளியேற்றச் செய்தார்கள். அவ்வளவு துன்பமுற்றபோதும் சக்கர நாற்காலியில் அழைத்துப் போகச் செய்து, பின்னர் கைத்தாங்கலாக மேடைக்கு கொண்டு செல்லப்படுவார். நீண்டதூரப் பயணங்கள் மேற்கொள்வார்.

இந்த மீட்டிங் முடிந்தபிறகு குடலிறக்க நோயால் வேதனையுற்ற பெரியார், உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏறக்குறைய 60 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்து வந்த பெரியாரின் வாழ்வு, 1973 டிசம்பர் 24-ம் நாள், காலை 7.30 மணியளவில் முடிவுற்றது.

அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு சென்னை இராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, எந்த விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியாரின் இறுதி அஞ்சலியை அரசு மரியாதையுடன் நடத்தி வைத்தார்.

“பெரியார், அரசியலில் எந்த உயர் பதவியும் வகிக்கவில்லை, குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லை. எப்படி அவருக்கு அரசு மரியாதை அளிக்கலாம்?” என்று அதிகார வர்க்கம் ஆட்சேபனைக் குரல் எழுப்பியது.

இதற்குக் கருணாநிதி, “காந்தியடிகள் எந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கவில்லையே. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதல்லவா?” என்று கேட்க, “அவர் தேசப் பிதா” என்றது அதிகார வர்க்கம்.

 “அவர் தேசப் பிதா என்றால், இவர் திராவிடத் தந்தை’’ என்றார் கருணாநிதி.

இவ்விதம் வாக்குவாதம் நடைபெற்ற பின்னர்தான் அரசு மரியாதைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், டிசம்பர் 25-ம் நாள் மாலை, தந்தைப் பெரியாரின் உடல் பெரியார் திடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 36 குண்டுகள் முழங்க, இராணுவத்தினர் வாத்தியம் இசைக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.