ரஜினியும் கமலும் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? உள்ளாட்சிக்கு ஓடி ஒளியும் ரகசியம்!

ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் நிற்கப் போவதுமில்லை, யாருக்கும் ஆதரவுமில்லை என்று சுருக்கமாக கூறி தப்பித்துக் கொண்டார்.


அதேபோன்று கமல்ஹாசனும் இந்த உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்கப்போவதில்லை என்று சொல்லி, தேர்தலில் நிற்காமல் தப்பிக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கும் சவுக்கடி பதிவு இது. கமல், ரஜினியின் அரசியல் அறியாமையை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறன்ன செய்வது?

மாற்றம் என்ற எதுவுமே அடித்தளத்தில் இருந்து தான் வடிவம் பெற்று முழுமை பெறும்...! ‘‘எனக்கு மட்டுமே அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக வேலை பார்ப்பதற்கு தான் என்னுடைய அமைப்பும், அதன் தொண்டர்களும்...’’ என்று இரு நடிகர்களும் நினைக்கிறார்கள் போலும்!

எந்த ஒரு மாற்றமும் எந்த தனி ஒரு மனிதனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. மகாத்மாகாந்தியை எடுத்துக் கொண்டாலுமே கூட, அவரைப் போல மாற்றங்களை இந்த நூற்றாண்டில் வாழும் காலத்திலேயே சாத்தியப்படுத்திய வேறொரு தலைவரில்லை. அதை அவர் அடித்தளத்தில் இருந்து தான் ஆரம்பித்தார்! கோயில் நுழைவு தொடங்கி கைராட்டை நூற்பு வரை எண்ணற்ற அவரது லட்சியங்களை நிறைவேற்ற அவர் முழுக்க,முழுக்க அடித்தளத் தலைமைகளை நம்பியே செயல்பட்டார்!

ஒவ்வொரு கிராமத்திலும்,சிறு நகரத்திலும் ஆங்காங்கே உள்ள காந்திய ஆளுமைகளே கோயில் நுழைவையும்,கைராட்டை நூற்பையும்,மதுக் கடை மறியலையும்,அன்னியத் துணி பகிஷ்கரிப்பையும் சாத்தியப்படுத்தின. அந்தந்த இடங்களில் உள்ள ஏராளமான உள்ளுர் ஆளுமைகளை பயன்படுத்தியே அவரது எல்லா வெற்றிகளும் நடைமுறை சாத்தியமாயின...!

அதற்கு அதிகாரப் பரவல் தவிர்க்க முடியாதது. மிக முக்கியம்! ஒவ்வொரு ஊரிலும் காந்தியாகவே தன்னை பாவித்து சிலர் ஆளுமை செலுத்தினார்கள்! எல்லா அதிகாரங்களும் என் கைக்கு கொண்டு தாருங்கள் மாற்றத்தை சாத்தியப்படுத்துகிறேன் என்பது அரசியல் அறியாமை என்பதைவிட ஜனநாயகப் பரவல் குறித்த அச்சம் தானேயன்றி வேறல்ல!

கமலும், ரஜினியும் உள்ளிடற்ற அலங்காரத் தலைமைகள் தானேயன்றி உண்மையானத் தலைவர்களாக ஒரு போதும் ஆகமுடியாது என்பதற்கு உள்ளாட்சி அதிகாரம் மற்றும் கடமைகள் குறித்த அவர்களின் ஈடுபாடின்மையே அத்தாட்சியாகிறது. தப்பித் தவறி இவர்கள் ஆட்சித் தலைமைக்கு வந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா தந்ததைவிட மிக மோசமான ஒரு நிர்வாகத்தைதான் தருவார்கள்! என்று எச்சரிக்கை செய்துள்ளார்.