ஸ்வீடன் சிறுமி என்ன பேசினார் தெரியுமா? உலகை சிந்திக்க வைக்கும் ஆவேச கேள்விகள்!

ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பேசிய பேச்சுக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. உலகத் தலைவர்களை தன்னுடைய கேள்விகளால் கட்டிப்போட்ட சிறுமியின் பேச்சு இதுதான்.


கோபமும் தீரமுமாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் பேசியது என்ன தெரியுமா? இதோ அவரது உரையின் முக்கிய பகுதிகள்.

“நாங்கள் உங்களை கவனித்துக்கொண்டு இருக்கின்றோம். உலகம் முழுவதும் எல்லாமும் தவறாகவே நடக்கிறது. நான் இங்கு இருக்கவேண்டிய அவசியமே இல்லை. நான் அந்தக் கடலின் மறுபக்கம் உள்ள ஒரு பள்ளியில் அமைதியாக படித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பேரழிவு ஏற்படும் அச்சத்தில் இந்த உலகம் இருக்கிறது. 

கடந்த 30 ஆண்டுகளாக நமது சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த உயிரினங்களும் பேரழிவை நோக்கி செல்கிறது. ஆனால் அது குறித்து உலகத் தலைவர்கள் யாரும் அக்கறை கொள்வதில்லை. இவற்றில் கவனம் கொள்ளாமல் பணம், பொருளாதார வளர்ச்சி பற்றி நீங்கள் இங்கு கற்பனையாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? 

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் நீங்கள் அசுரர்களாகத்தான் இருக்க வேண்டும். தற்போது உலகம் எதிர்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த ஒரு திட்டமோ, தடுக்கும் நடவடிக்கை குறித்த தீர்வோ இந்த ஐ.நா கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏன் இதை கட்டுப்படுத்தவில்லை.

நீங்கள் இந்த உலகிற்கு செய்துகொண்டிருக்கும் இந்த துரோகத்தை நாங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம். எங்கள் தலைமுறையின் பார்வை உங்களை நோக்கித்தான் இருக்கிறது. நீங்கள் எங்களை தோல்வி அடையச் செய்யலாம் என்று நினைத்தால் உங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். உடனடியாக ஆக்கபூர்வ நடவடிக்கை எடுங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கிரேட்டா.

பூமித்தாயின் மகளின் குரலுக்கு இனியாவது ஆணவ அரசுகள் செவி சாய்க்கட்டும்.