இன்னைக்கு யானைகள் தினம் என்பது தெரியுமா? தும்பிக்கை நாயகனுக்கு ஒரு சலாம்!

மனிதர்களுக்கு எப்போதுமே பார்க்க அலுக்காத விஷயங்கள் என்பதில் யானைக்குத்தான் முதல் இடம்.


இதனை அடுத்துத்தான் வானவில், ரயில், வண்ணத்துப்பூச்சி என்று வரிசை போடுகிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அத்தனை பேரையும் வசீகருக்கும் யானைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறது.

அதுதான் இன்று. ஆகஸ்ட் 12ஐ யானைகள் தினமாக கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பு. ஏனென்றால் உலகம் முழுவதும் யானைகள் எண்ணிக்கை தினமும் குறைந்துகொண்டே வருகிறது. காடுகளின் பரப்பளவு குறைவதுதான் யானைகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணம்.

இதையடுத்து தந்தத்துக்காக வேட்டையாடுவதும், ஊருக்குள் நுழையும் யானையை தடுப்பதற்குப் போடப்படும் மின்சார வேலி, ரயில்வே தண்டவாளம் போன்றவைகளும் யானைகளுக்கு ஆபத்தாக விளங்குகின்றன.

சுற்றுச்சூழலின் உண்மையான அடையாளம் யானைகள்தான். ஆம், காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.

காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.

யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும். யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன. தந்தம் தான் யானையின் முக்கிய ஆயுதம். தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம்.

ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத்தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன.

இத்தனை பெருமை மிகுந்த யானைகளை நம் மனிதர்கள் இன்னமும் கோயில்களிலும் சாலைகளிலும் பிச்சை எடுக்க வைக்கிறார்கள் என்பதுதான் அவமானம். 

யானை மீதேறிவந்து யாசகம் கேட்கும் நாடு என்று கவிஞன் சொன்னது நமக்குத்தான் அவமானம். யானைகளை அதன் வாழுமிடத்திலேயே வாழவிடுவோம். அதுதான் யானைக்கு நாம் செய்யும் மரியாதை.