தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் கதை என்னன்னு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் கதை பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலின் அடிப்படையைக் கொண்டது. அந்தப் படத்தின் கதை சுருக்கம் இதுதான்.


பூமணியின் வெக்கை நாவல் ஒரு கொலையில் தொடங்கும். முதல் காட்சி தொடங்கி வேகம் வேகம் தான் நாவல். அதிர்ச்சிக் காட்சியில் தொடங்கி ஆர்வத்தைத் தக்க வைக்கும் உத்தியில் அமைந்த சினிமாத்தனம் நிரம்பிய சாதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். 

சிதம்பரம் என்ற பதினைந்து வயது சிறுவன் வடக்கூரான் என்றவனின் கையை தெருமுக்கில் வைத்து வெட்டுகிறான். பின்னாடி துரத்தி வருபவர்கள் மீது குண்டை வீசுகிறான். அவன் வடக்கூரானின் கையை வெட்ட என்ன காரணம்? என்பதை விவரிக்கும் விதமாக நாவல் விரிகிறது.

அண்ணனுடனே சுற்றித்திரிந்த சிதம்பரம், பல பஞ்சாயத்து பேசி தீர்ப்பு சொல்லும் நடுத்தர வர்க்கத்தில் ஒரு மாமா, பாசமிகுந்த அத்தை, கண்டிப்பான அய்யா, வம்பு இழுத்துக் கொண்டே திரியும் வடக்கூரான் இவர்கள்தான் நாவலின் மையக் கதாபாத்திரங்கள். இடையில் சானகி என்ற சிறுமி வந்து நம் கண்களை கலங்கடிக்கச் செய்கிறாள்.

குறிப்பாக சானகி, சிதம்பரம், அண்ணன் மூவரும் கோயிலுக்கு சென்று குகையில் உள்ள சிலையையும் அவர்ளுக்குள் உண்டான ஈகோவையும் குடல் மாலையையும் விவரிக்கும் இடம் மெய் சிலிர்த்து விடுகிறது.

அய்யா, சிதம்பரம், மாமா, அத்தை போன்றோர் வரும் இடமெல்லாம் குடும்ப பாசம் பொங்கி வழிகிறது. சிதம்பரம் இவர்களுக்கு கொடுத்த பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளித்தார்கள்? வடக்கூரான் இறுதியில் உயிரிழந்தானா என்பது மீதிக்கதை.

இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது ஏகப்பட்ட அவார்டுகளை குறிவைத்து எடுத்திருப்பது போல் தெரிகிறது. பார்க்கலாம்.