எடப்பாடிக்கு எதிராக ராஜன் செல்லப்பா போர்க்கொடி ஏன்? உண்மை பின்னணி!

விஜய் நடித்த படத்தை தியேட்டரில் கிழித்து எரித்தது தொடங்கி, தன்னுடைய மகனுக்கு சண்டை போட்டு எம்.பி. சீட் வாங்கி வந்தது வரை ராஜன் செல்லப்பா கெத்துதான் என்று எல்லோருக்கும் தெரியும்.


ஆனால், அவர் இன்று எழுப்பிய பஞ்சாயத்து அ.தி.மு.க.வில் பெரும் புயலை எழுப்பியிருக்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய செல்லப்பா, ‘‘பன்னீரின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று வெற்றியை சமர்ப்பித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். அவரைப் போன்று இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்களும் ஏன் அம்மாவின் சமாதிக்குச் சென்று ஆசிர்வாதம் பெறவில்லை. அவர்களை தடுத்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதைவிட, அடுத்து இவர் எழுப்பிய கேள்விதான் மிகப்பெரியது. ஆம், ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

அப்படியென்றால் ஜெயலலிதாவைப் போன்று எடப்பாடி பழனிசாமியே முதல்வராகவும், கட்சி பொதுச் செயலாளராகவும் இருக்க வேண்டுமா என்று கேள்வி கேட்டனர். அதற்கு ராஜன் செல்லப்பா, ‘‘அதிகாரம் படைத்தவர், கட்சியைக் கட்டுக்கோப்புடன் நடத்துகிறவர் முதல்வராக இருந்தாலும், முதல்வராக இல்லாமல் இருந்தாலும் தவறு கிடையாது. ஆனால், அது அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவராக இருக்க வேண்டும்’’ என்று கொளுத்திப் போட்டார்.

அப்போதுதான் அவர் யாருக்காக பேசுகிறார் என்பது புரியவந்தது. ஆம், பன்னீர்செல்வத்தின் கையில் கட்சி செல்லவேண்டும் என்பதை நோக்கி உயர்த்தப்பட்ட முதல் கலகக் குரல் என்றுதான் இதை சொல்ல வேண்டும். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் சமாளித்துவந்தாலும், இந்த விவகாரம் பெரிதாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார்கள்.

அதாவது, கட்சிப் பொற்ப்பை பன்னீர் வசம் முழுமையாக ஒப்படைக்கும் வரை இதுபோல் அவ்வப்போது ஒருவர் கிளம்புவாராம். இப்படி கிளப்பிவிடுவது பா.ஜ.க. என்பதுதான் ஆச்சர்யமான தலைமை. ஏனென்றால், அவர்களுக்கு மிகவும் தெளிவான அடிமை தேவையாம். அதற்கு பன்னீர்தான் சரிப்படுவாராம். மேலும், இப்படி குரல் எழுப்பிய ராஜன் செல்லப்பாவை மடக்குவதற்காக விரைவில் மந்திரி பதவி கொடுக்க இருக்கிறார்களாம். சூப்பரப்பா.

அடுத்து யாருப்பா குரல் கொடுக்கப் போறது..?