குளிர் காலத்திலும் சூடான விலையேற்றம்! காரணம் என்ன தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்ததன் காரணமாக. புதிய உச்சத்தை தொட்டுள்ளது காய்கறிகளின் விலை. வின்டர் சீசன் எனப்படும் குளிர்காலம் தொடங்கியுள்ளது.


இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், இந்தியாவின் சில மாநிலங்களில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலையாக கணக்கிடப்படுகிறது.

பொதுவாக குளிர்காலங்களில் அசைவ உணவுகளை தவிர்க்கும்படி மருத்துவர்கள ஆலோசனை கூறுவது வழக்கம். இந்த காலத்தில் மனிதனின் செரிமான சக்தி குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு. காய்கறிகளை உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.  அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் சபரிமலை அய்யப்பன் கோவில், பழனி முருகன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதன் காரணமாக காய்கறிகள் இரு மடங்கு விற்பனையாகும்.

இந்நிலையில் கடந்த ஆண்டின் குளிர்காலத்தில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலையை விட. இந்த குளிர்காலத்தில் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பெய்த கன மழையின் காரணமாக மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பின் காரணமாக அங்கு விளைச்சலிட்ட உழவுப்பயிர்கள் நாசமாகிப் போனது.

அதன் எதிரொலியாக காய்கறிகள் குறிப்பாக வெங்காய உற்பத்தி குறைந்து சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது காய்கறிகள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாசிக். சோலாப்பூர் ஆந்திரா என குறிப்பிட்ட சில பகுதிகளில் விளைவிக்கப்படும் வெங்காயங்கள் தான் இந்தியாவின் மொத்த சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் கடந்த‌ ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த பகுதிகளில் வெங்காய உற்பத்தி தடைபட்டது. வெங்காய உற்பத்தி சரிவின் காரணமாக கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இந்த ஆண்டு 200 ரூபாய் வரை விற்பனை ஆனது.

இந்தியாவில் திடீரென ஏற்பட்ட இந்த‌ விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் சார்பில் வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற காய்கறிகளின் விலை சர்ரென்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கம் உயர்ந்ததன் காரணமாக. காய்கறிகளின் விலை 50 சதவீதம் அளவுக்கும். பருப்பு வகைகள் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது என்ற செய்திகள் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காய்கறி சந்தையில் கேரட் கிலோ 60 ரூபாய்க்கும். தக்காளி 30 ரூபாய்க்கும் பீன்ஸ் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி. பருப்பு வகைகளின் விலை சுமார் 14 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மந்த நிலையின் காரணமாக.
மின்சாரம், சுரங்கம் உற்பத்தி துறைகளில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து தொழில்துறை உற்பத்தி 3.8 சதவீதமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 10 முக்கிய தொழில்கள் இரட்டை இலக்க சரிவை சந்தித்துள்ளன. மொத்தத்தில் தொழில் துறை உற்பத்தி 3 மடங்கு குறைந்துள்ளது. பணவீக்கம், உற்பத்தி குறைவு, செலவு குறைவு போன்றவை காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூலும் குறைந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேளையில். உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து சில்லரை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வு என கூறுகிறது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை. அசைவ உணவுப் பிரியர்கள் சைவத்திற்கு மாறிய இந்த வேளையில். காய்கறிகளின் விலை உயர்வை கண்டு. அடுத்து என்னவிதமான உணவகளுக்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.

மணியன் கலியமூர்த்தி