அசுரன் படத்தில் வரும் பஞ்சமி நிலத்தின் அர்த்தம் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் அசுரன் படத்தில் பஞ்சமி நிலம்தான் முக்கியமான பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சமி நிலம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமே.


ஒடுக்கப்பட்டவர்களுக்கு எந்த நிலமும் சொந்தம் இல்லை என்ற நிலைதான் நீடித்துவந்தது. அதனால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்று 1891 ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர் ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவரிடம் அயோத்திதாச பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும் சேர்ந்து மனு கொடுத்தனர். அந்த மனு விக்டோரியா மகாராணியின் பார்வைக்குச் சென்றது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்த விக்டோரியா மகாராணி, அந்த மனு ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும் 2.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது;

அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்தவர்களிடம் மட்டும்தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது.

மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதி திராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற காரணத்தால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், தரிசு நிலம் என்று வகைப்படுத்தியுள்ளது.

1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.

அப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களில் செங்கல்பட்டு அருகே உள்ள காரனைபாக்கம் கிராமத்தில் 650 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. தலித் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாத அந்த நிலத்தை ஒரு வடநாட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு வீரபத்திரன் என்பவரின் மகன் தீபன் சக்கரவர்த்தி என்பவர் விற்பனை செய்து முன்பணம் பெற்றுள்ளார்.

 இந்த தகவல் அறிந்த அந்தப் பகுதி தலித் மக்கள் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் எனது நண்பர் தோழர் எஸ்.நடராசன் ஆலோசனையில் பஞ்சமி நிலத்தில் அம்பேத்கார் சிலை ஒன்றையும் வைத்துள்ளனர். அந்த சிலையை விஷமிகள் சிலர் உடைத்து விட்டதால், அவர்களைக் கைது செய்யக் கோரி செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டனர்.

அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் கூட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகிய இருவரும் குண்டுக்கு இரையாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சமி நிலத்தை மீட்க முன் நின்று போராடிய மாமண்டூர் பாதிரியார் மார்ட்டின் அலுவலகம் மூடப்பட்டது.

அதன் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன் தலைவராகவும், என்.ஜி.ஒ. ஜெயகரன் ஜோசப் செயலாளராகவும், நடராசன் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும், ஆர்.கே.சாமிநாதன் அமைப்பு செயலாளராகவும் கொண்ட பஞ்சமி நிலம் மீட்பு அமைப்பு தொடங்கப்பட்டது. பஞ்சமி நிலத்திற்காகப் போராட்டம் நடத்துவது, பஞ்சமி நிலத்தை மீட்பது, அம்பேத்கார் ஊர்தி பயணம் செல்வது, அதே இடத்தில் அம்பேத்கார் சிலை வைப்பது என்று பல போராட்ட வடிவங்களை கொண்டு அந்த அமைப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இறங்கியது.

தி.நகர் பனகல் பூங்கா அருகில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டனர். ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், செயலாளர் தலித் எழில்மலை ஆகியோரும் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

அதன் பிறகு அம்பேத்கார் சிலை வைக்கச் சென்ற மக்களை செங்கல்பட்டு சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்த மக்களைப் போலீசார் கைது செய்தனர். சிங்கப்பெருமாள்கோவில் கிராமத்தில் சாலை மறியல், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பும் மறியல் என தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று விழிப்புணர்வு ஏற்பட்டது. இதைத்தான் அசுரனில் பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன்.