வேலூருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் போறாங்க தெரியுமா? ஸ்டாலின் தெம்பில் தி.மு.க.!

வேலூர் தொகுதி நமக்குத்தான் என்று தி.மு.க.வினர் ரொம்பவே தெனாவெட்டாக இருக்கிறார்கள்


வேலூர் தொகுதி நமக்குத்தான் என்று தி.மு.க.வினர் ரொம்பவே தெனாவெட்டாக இருக்கிறார்கள் என்று ஏரியாவில் இருந்து தகவல்கள் வருகின்றன. இன்று ஸ்டாலின் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். அடுத்து, உதயநிதி வேலூரில் புகுந்து கலக்க இருக்கிறார். 

மக்கள் ஆதரவு பெரிதாக இருக்கிறது, அ.தி.மு.க.வின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்பதால், பெரிதாக பணம் இறக்கவேண்டாம் என்று துரைமுருகன் முடிவுக்கு வந்துவிட்டாராம். ஓட்டு ஒன்றுக்கு 500 ரூபாய் தரலாம் என்று இருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம். ஆம், இப்போது 200 ரூபாய் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறாராம்.

அதேபோன்று எதிர் அணியிலும் பெரிதாக பரபரப்பு இல்லை என்பதுதான் உண்மை. கிட்டத்தட்ட 200 அ.தி.மு.க. பெரும்புள்ளிகள் களத்தில் இருந்தாலும், எல்லோரும் யார் பணம் இறக்குவது என்பதைத்தான் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

கே.சி.வீரமணி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும்தான் இந்தத் தேர்தலுக்குப் பொறுப்பு எடுத்துள்ளனர். ஆனால், இதுவரை இருவரும் பணம் தருவது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஏ.சி.சண்முகம் பணம் கொடுத்தால் மக்களுக்குக் கொடுக்கலாம் என்று எண்ணமாம்.

அ.தி.மு.க. பணம் கொடுக்கவேண்டும் என்று சண்முகம் நினைக்கிறார். எப்படியென்றாலும் கடைசி கட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் 500 ரூபாய் கொடுத்தாலே அதிகம் என்று சொல்கிறார்கள். ஆக, வேலூர் தேர்தல் மக்களுக்கு பெரிதாக எதுவும் அள்ளித்தரப் போவதில்லை, கிள்ளித்தான் கொடுக்கப் போறாங்கப்பா...