பெண்ணுக்கு இந்தியாவில் என்ன மரியாதை என்று தெரியுமா? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுவது தொடர்பாக 152 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், இந்தியா 138வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.


உலக அளவில் முஸ்லீம் நாடுகளில்தான் பெண்ணுக்கு மதிப்பு குறைவு என்று பலரும் நம்பியிருக்கும் வேளையில், இந்தியாவில்தான் மதிப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில்தான் அதிக அளவில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது என்பதுதான். கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

என்கவுண்டர் வரைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? தண்டனைகளைக் கடுமையாக்குவதால் மட்டும் இந்தக் குற்றங்கள் குறைந்துவிடுமா? வெறியுணர்வோடு நெருங்குகிறவனுக்கு அந்தக் கணத்தில் சட்டங்கள் பற்றிய நினைப்போ, தண்டனைகள் பற்றிய அச்சமோ ஏற்படுமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு செய்தியின்படி, நாடு முழுவதும் பெண்கள் மீது மூன்றரை லட்சம் குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் வன்புணர்வுக் குற்றங்கள் மட்டுமே சுமார் 38,000. பதிவு செய்யப்படாத குற்றங்கள் இதைவிடப் பல மடங்கு இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் பாலியல் அத்துமீறல்கள் மட்டும்தானா?

பாலியல் குற்றங்களின் அடியிழையாக இருப்பது பாலியல் இச்சை மட்டுமல்ல, பெண்ணிடம் ஆணின் அதிகாரத்தை நிறுவுகிற ஆணாதிக்க ஆணவமும்தானே? சிறுவயதிலிருந்து பிரித்து வைத்து வளர்க்கிற பழக்கம் சரிதானா? பெண்கள் பள்ளி, ஆண்கள் பள்ளி, மகளிர் கல்லூரி, ஆடவர் கல்லூரி என்று கல்வி நிறுவனங்களிலும் பாலினப் பிரிவினை இருக்கிறது.

இன்றைய சமூக அறிவியல் புரிதல்களின் அடிப்படையில் இருபாலர் நிறுவனங்களாகக் கூட அல்ல, பலவகைப் பாலினத்தவர்களுக்கும் பொதுவான கல்வி நிலையங்களாக மாற்றப்பட வேண்டாமா? பாலியல் தொடர்பான தகவல்கள் குழந்தைகளின் காதில் விழுகிறபோது, அது பற்றி வீட்டில் விசாரிக்கிறார்கள் என்றால், உடனே பெரும்பாலான பெற்றோர்களும் பெரியவர்களும் பதறிப் போகிறார்கள்.

"இதையெல்லாம் நீ ஏன் பேசுகிறாய்" என்று கேட்கிறார்கள். குழந்தைகள் மனங்களில் ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்ப்பதற்கு உரையாடுகிற வாய்ப்பாக எடுத்துக்கொள்ளாமல் பதறுவதும் தடை போடுவதும் பக்குவமான வளர்ச்சிக்கு உதவுமா? ஆண் பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதுதான் இதற்கு தீர்வு என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்.