இப்படி ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருப்பது தெரியுமா? வழக்கறிஞர்கள் போராட்டம் வீணாப்போச்சு!

விபத்தில் காயம் அடைபவர்கள் அல்லது மரணம் அடைபவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை முழுமையாகக் கொடுக்கப்பட்டு வந்தது.


இனிமேல் இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ. போல பிரித்துக் கொடுக்கப்படும் என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தொகையை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொடுத்து விட்டு உரிய அறிவுரைகள் வழங்குவதே சரியானது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும், விபத்தில் ஊனம் அல்லது படுகாயமடைபவருக்கும் இந்தத் தொகை முழுமையாகத் தேவைப்பட வாய்ப்புள்ளது.

இ.எம்.ஐ. தொகையை வைத்துக்கொண்டு வழக்குரைஞர் கட்டணம், நீதிமன்ற செலவுகளை எப்படிச் செய்வார்கள்? விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்படும் வாய்ப்பும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் அது அவர்களுடைய தொகை. அதைப் பற்றி எந்த விதமான விவாதமும் கருத்துக் கேட்பும் இல்லாமல் முடிவு செய்வது ஜனநாயகபூர்வமானதாக இல்லை என்று கூறி வழக்குரைஞர் சங்கங்கள் போராடி வருகின்றன.

விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அதீத அக்கறை இருந்தால் ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படும் நீதிமன்றக் கட்டணத்தைக் குறைக்கலாம். வழக்கம் போல இதை மக்களிடம் விளக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இதுபோன்ற நீதி மன்ற உத்தரவுகளில் தங்கள் நிலைபாட்டை விளக்கவும், போராட்டத்தில் பங்கு கொள்ளவும் முன்வரவில்லை.

வழக்கம் போல மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டமும் தோற்கடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நாள்தோறும் விபத்தில் பாதிக்கப்படும் பல்லாயிரம் உழைக்கும் மக்களின் தோளில் இன்னொரு சிலுவை சுமத்தப்பட்டுள்ளது என்றே தெரிகிறது.