நீங்கள் ரசித்து உண்ணும் ஸ்வீட்ஸ்களின் மீது ஒட்டி தரும் வெள்ளி இலைகளின் ஆபத்து பற்றி தெரியுமா!

நாம் உண்ணும் உணவிலும் வெள்ளியை கலக்கிறோம். உணவின் மேல் வெள்ளியை அணிந்து, அழகு பார்த்து, ரசித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.


விலை உயர்ந்த சுவீட்களின் மீதும், பிரியாணியின் மீதும் வெள்ளி நிறத்தில் பளபள வென்று மின்னுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மெல்லிய வெள்ளி இழைகள் தான் அந்த சுவீட்களின் மீது அமர்ந்து மின்னிக் கொண்டிருக்கிறது. சுபாரி, பான், பீடா, பழங்கள் போன்றவற்றின் மேலும் வெள்ளி இழை பேப்பர்கள் ஒட்டப்படுவதுண்டு.

மென்மை கொண்ட வெள்ளி உலோகத்தை, வெள்ளி படலம், வெள்ளி இழை, வெள்ளி பேப்பர், வெள்ளி ஷீட் என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். வெள்ளியும், தங்கமும் மந்த உலோகங்கள் என்பதால், குறைவான அளவில் சாப்பிட்டால், உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நம்பப்படுகிறது.

ஆனால் இன்றைய நாளில் வெள்ளி இழைகளுக்குப் பதிலாக அலுமினிய இழைகளை இனிப்புகளின் மீது ஓட்டுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அலுமினியம் உடலில் அதிக அளவில் சேர்ந்தால், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகிவிடும். அது கால்சியத்தை எலும்பில் படியவிடாது. அதனால் மூளையிலுள்ள திசுக்களில் அலுமினியம் படிய ஆரம்பித்து ‘அல்ஸெய்மர் நோய்’ தோன்றக்கூடும்.

அலுமினியம் மட்டுமில்லை, வெள்ளிகூட அதிக அளவில் உடலுக்குள் போனால், அது சருமத்தில் படிந்து, சருமத்தை நீலம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும். இதற்கு மருத்துவ மொழியில் ‘அர்ஜைரியா’ என்று பெயர். இது உடலுக்கு தீங்கில்லை என்றாலும் நல்லது இல்லை.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டாலும், மக்களுக்கு இனிப்பு உணவுகளின் மீதான மோகம் நீங்கவில்லை. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இனிப்புகளை மிதமான அளவில் சாப்பிடுங்கள். இனிப்புகள் மீது ஒட்டப்பட்டிருப்பது எந்த மாதிரியான இழை என்பதை கண்டறிவது சிரமம் என்பதால், இழை சேர்க்கப்படாத உணவுகளை வாங்கி உண்ணுவதில் ஆர்வம் காட்டவேண்டும்.