அப்பாடா, திமுக ஜெயிச்சிடுச்சு! போய் எல்லாரும் வேற வேலையப் பாருங்கப்பா!

தமிழிசையின் பாணியில் சொன்னால் திமுகவுக்கு இது ஒரு தோல்விகரமான வெற்றி, அதிமுகவுக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி.


ஆனாலும் ஏ.சி சண்முகத்தின் செலவில் பல அசம்பாவிதங்களை தவிர்த்து விட்டது இந்தத் தேர்தல்.எடப்பாடியை கொஞ்சம் அடக்கி இருக்கும், ஒபிஎஸ் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இருப்பார். ஒரே நாளில்தான் நமது தொலைக்காட்சி விவாதங்களில்தான் எத்தனை விவகார முத்துக்கள் வந்து விழுந்தன.

வேலூர் மாலை முரசு ஆசைப் பட்டதுபோல எ.சி சண்முகம் வெற்றிருந்தால் மு.க இல்லாமல் மூழ்கும் திமுக!. ஸ்டாலின் அவசரப்பட்டு உதயநிதிக்கு பதவி கொடுத்திருக்கக் கூடாது. மோடி எதிர்ப்பலை காலி. எடப்பாடி விஸ்வரூபம், துரைமுருகன் மகன் வெற்றியை பறித்த உட்கட்சி பூசல் என்று கொட்டிக் கொடுத்திருப்பார்கள் காரணங்களை.

இப்போதும் ஒன்றும் குறைந்து போகவில்லை,இந்த இழுபறிக்கு காரணம் என்ன என்று பட்டிமன்றங்கள் துவங்கும்.எங்களை அழைத்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று ஹெச்.ராஜா அறிக்கை விடுவார்.மகனுக்கு எம்.பி சீட் வாங்கிக்கொண்டு வன்னியர் ஓட்டுகளை திமுகவுக்கு போடச்சொல்லி விட்டார் ராம்தாஸ் என்று ஒரு அறிக்கை வரலாம்.

போலிங் அன்றைக்கு பார்த்து அமித்ஷா காஷ்மீர் அந்தஸ்தை பறித்ததுதான் காரணம் என்று ஒரு கணிப்பு வரலாம்.எதுவாக இருந்தாலும் இந்த வேலூர் தேர்தல் டி.20 ஆட்டத்தில் சூப்பர் ஓவர் போலதான் ஆகிவிட்டது.அடுத்த ஐந்து வருடத்திற்கு எந்த மாற்றமும் வரப்போவதில்லை.இரண்டுபேர் நிலைதான் பரிதாபம்,ஜூனியர் ஒபிஎஸ் அடுத்த ஐந்து வருடமும் அடிவாங்க வேண்டும்.

2014 தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வந்த நான்,முதலிடத்தில் வெற்றிபெற்ற அதிமுகவின் கூட்டணி இருந்ததும் தோற்றது எப்படி என்ற கணக்கை திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தபடியே இருக்க வேண்டும்.