35 ஆண்டுகளுக்கு பின்னர் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றும் திமுக!

திண்டுக்கல்: எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அந்த இடைத்தேர்தலில் தான் அதிமுக முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்று திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.


அதன் பிறகு திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க.வுக்கு மிகவும் ராசியான தொகுதியாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாக வேலுச்சாமி போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.

1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2 முறை அ.தி.மு.க.வும், பின்பு 2 முறை காங்கிரசும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அ.தி.மு.க. வசமானது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்று எம்.பி.யானார். அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. தனது வேட்பாளரை நிறுத்தியது.

இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.