நெல்லையில் தி.மு.க.வுக்கு தொல்லையோ தொல்லை… அதிர்ச்சியில் ஸ்டாலின்.

தேர்தல் நேரத்தில் புதுப்புது நிர்வாகிகளை நியமனம் செய்வது தி.மு.க.வில் பெரும் புகைச்சலையும் தகராறையும் உருவாக்கி வருகிறது. சமீபத்தில் நெல்லை கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தை பிரிப்பது தொடர்பான பஞ்சாயத்து, தலைமை நிர்வாகி நேரு முன்னிலையில் நடைபெற்றது.


தற்போதைய நெல்லை எம்.பியான ஞானதிரவியம்தான் வள்ளியூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்குப் போட்டியாக வர்த்தக அணி துணைத் தலைவர் கிரகாம்பெல் காய்நகர்த்தி வருகிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனும், ஞானதிரவியமும் வேண்டா வெறுப்பாக நட்பு பாராட்டி வருகின்றனர்.

ஒன்றியத்தை பிரிக்க நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட ஞானதிரவியம், புதிய ஒன்றியத்திற்கு தான் சொல்லும் ஆளையே செயலாளராக நியமிக்க வேண்டுமென நேருவிடம் சொல்ல, இதற்கு கிரகாம்பெல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தனது ஆளையே நியமிக்க வேண்டுமென அவரும் மல்லுக்கட்ட, ஞானதிரவியத்திற்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசியிருக்கிறார். கொஞ்ச நிமிடங்களில் அறிவாலயமே அதிர்ந்து போகுமளவிற்கு வார்த்தை யுத்தம் வெடித்திருக்கிறது.

நெல்லை தமிழில் கெட்ட வார்த்தைகளை இரு தரப்பும் சகட்டுமேனிக்கு பயன்படுத்த நேரு செம டென்ஷனாகிவிட்டாராம். கடைசியில் அவர் தனது வழக்கமான பாணியில் ஓங்கி சத்தமிட அதன் பிறகே அமைதி திரும்பியிருக்கிறது. கொஞ்ச நேரம் உள் அறைக்கு சென்ற நேரு, இந்த நெல்லை குஸ்தி பற்றி ஸ்டாலினிடம் போனில் பற்றவைத்திருக்கிறார்.

கடைசியில் வள்ளியூர் ஒன்றியம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றிற்கு ஞானதிரவியமே செயலாளராகத் தொடர்கிறார். புதிய ஒன்றியத்திற்கு கிரகாம்பெல் சொன்ன ஆளை போடாமல் அவரது பெயரையே மா.செ ஆவுடையப்பன் பரிந்துரை செய்திருக்கிறார். 

அடப்போங்கப்பா என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர்.