ஹிந்தி கற்றுக் கொடுக்கும் திமுகவினர் நடத்தும் பள்ளிக் கூடங்கள்! பட்டியல் வெளியிட்டார் ஹெச்.ராஜா!

தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்பதை பட்டியலாக வெளியிட்டுள்ளார் ஹெச் ராஜா.


அண்மையில் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதுநாள் வரை கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்பதுதான் இருமொழிக் கொள்கை. இதனை மாற்றி தமிழ் ஆங்கிலத்தோடு கட்டாயமாக மூன்றாவது ஒரு மொழியை கற்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் ஆங்கிலத்துடன் ஹிந்தியை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி என்று கூறி திமுக கடுமையாக எதிர்த்தது. புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்று மு க ஸ்டாலின் எச்சரித்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் அல்ல ஆனால் மாணவர்கள் விரும்பும் மொழியை படித்துக் கொள்ளலாம் என்று கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திமுகவினர் எதற்காக இந்தியைக் கட்டாயமாக்க கூடாது என்று எதிர்பார்க்கின்றனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் பல்வேறு நகரங்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் அதிக அளவில் திமுகவினர் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

ஹிந்தி கற்றுத் தருவதாக அந்த மாணவர்களிடம் இருந்து திமுக நிர்வாகிகள் வருடாவருடம் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு இந்தியை கட்டாயமாக்கினால் அரசுப் பள்ளியிலேயே ஹிந்தி கற்றுத் தரப்படும். இதனால் தங்கள் பள்ளிக்கு மாணவர் சேர்க்கை குறையும் என்பதால் தான் திமுகவினர் கட்டாய இந்தி எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திக்கொண்டே ஹிந்தி கற்றுக் கொடுக்கும் திமுகவினரின் பள்ளிகள் பட்டியலையும் அவர்களின் பெயர் கட்சி பதவியோடு வெளியிட்டுள்ளார் ஹெச் ராஜா.