தி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெருந்தலைகள்.

டெல்லியில் ஆ.ராசா, கனிமொழிக்கு எதிரான 2ஜி ஊழல் வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் மீதான சி.பி.ஐ. விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது, கட்சியின் பெருந்தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், அ.ராசாவும் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும், அமலாக்க பிரிவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. இந்தமுறை குற்றம்சாட்டப்பட்ட இருவரும் எளிதில் தப்பிவிடாதபடிக்கு சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் மிக தீவிரமாக இந்த வழக்கை கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

அதேபோன்று, கடந்த எம்பி தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். திமுக சார்பில் தொகுதி முழுக்க பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து துரைமுருகன் வீடு , அவரது ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

துரைமுருகன் வீட்டில் கணக்கில் வராத 10 லடசத்து 50 ஆயிரமும், பூஞ்சோலை சீனிவாசன் உறவினர் வீட்டில் 11 கோடியே 48 லட்சமும், பூத் சிலிப்புடன் கூடிய வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அங்கு தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. கதிர் ஆனந்த் உள்ளிட்ட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கொஞ்ச காலம் அடங்கிக் கிடந்த இந்த வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பணப்பரிமாற்றத் தகவல்கள் இடம்பெற்றுள்ள டைரி உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

சிபிஐயின் இந்த அதிரடி அட்டாக், துரைமுருகன் தரப்பை நிலைகுலையச் செய்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் எத்தனை தலைவர்கள் ஜெயிக்குள் இருக்கப்போகிறார்களோ என்பதுதான் தெரியவில்லை.