மறைமுகத் தேர்தலை கோட்டை விட்டதா தி.மு.க.? ஹேப்பி மூடில் எடப்பாடி குரூப்!

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய துணை தலைவர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.


வாக்குச்சீட்டு முறையில் வெற்றியைக் குவித்த தி.மு.க., இன்றைய தேர்தலில் கோட்டை விட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நேற்றே அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, எப்படி இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வகுப்பு எடுத்த காரணத்தாலே, தி.மு.க.வுக்கு இந்தத் தோல்வி என்று சொல்கிறார்கள். 

இந்தத் தோல்வி குறித்து தி.மு.க.வினர் அமைதியாக இருக்கிறார்கள். ஏனென்றால், இந்தத் தோல்விக்கு அவர்களது கையாலாகத்தனமே காரணம். ஆனால், துள்ளுகிறது இந்திய கம்யூனிஸ்ட். உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்த போதே ஆளும் கட்சி அஇஅதிமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுத்து தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக அறிவித்துக் கொள்ளும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்திருந்தது.

சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்பார்த்தது போலவே தி.மு.கழகமும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பான்மை பெற்ற ஒன்றியங்களில் தலைவருக்கான தேர்தல்கள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் 7 வார்டு உறுப்பினர்களின் வாக்குகள் திமுகழகக் கூட்டணி வேட்பாளர் பெற்றிருந்தார். அதனை திரும்ப, திரும்ப எண்ண வைத்து, இறுதியில் அஇஅதிமுகவினர் தேர்தல் மையத்தில் அத்துமீறி நுழைந்து கலகம் செய்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ‘திடீர் உடல்நலக் குறைவு(!)’ ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை மாநில தேர்தல் ஆணையம் சிந்திக்க மறந்ததால்(!!) பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களில் ‘சட்டம்-ஒழுங்கை’ ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். அஇஅதிமுகவின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று டென்ஷன் ஆகியிருக்கிறார் இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.