வீடியோ வெளியிட்டு தொழில் அதிபர் தற்கொலை! SC-ST சட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததால் விபரீதம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் போலீசார் எஸ்சி எஸ்டி சட்டத்தில் பொய் வழக்கு போட்டதாகவும் ,இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வீடியோ வெளியிட்டு திமுக பிரமுகரும் தொழில் அதிபருமான ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (50).இவர் திமுக பிரமுகர். இவரது தம்பி செந்தில்குமார் இவர் ஆத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர். பிரேம்குமார்  அதே பகுதியில் அவரது தம்பி செந்தில்குமாருடன் இணைந்து நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அவரிடம் ஆத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் பணம்  வாங்கியுள்ளார். இரண்டு மாதத்திற்கு முன்பு பிரேம்குமார் அதிகவட்டி கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக ராஜ்குமார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று மாலை வீட்டில் இருந்த பிரேம்குமார் வாயில் நுரை தள்ளிய நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆத்தூர்  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே பிரேம்குமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்?என்ற கேள்வி அனைவரிடம்  வலுவாக  எழுந்தது .

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான  காரணத்தை விளக்கி தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கு ஆத்தூர் போலீசார் போலியாக எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்ததே காரணம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உறவினர்கள் மற்றும் அவரது மனைவி செல்போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை எடுத்துக் கொண்டு போலீசாரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளனர் அப்போது அவர்கள் கூறியதாவது: ராஜ்குமார் அவரிடம் தனது ஆட்டோ ஆவணங்களை வைத்து பணம் வாங்கி இருந்ததாகவும் அதனை திருப்பிக் கொடுக்காத நிலையில்  பிரேம்குமார் அவரை மிரட்டியதாகவும் ராஜ்குமார் ஆத்தூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் .

புகாரை எடுத்து இருவரையும் ஆத்தூர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சமரசம் பேசி வைத்தனர். அதில் ராஜ்குமாரிடம் வாங்கிய ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும். பணத்தையும்  திரும்ப கேட்கக் கூடாது என்று போலீசார் பிரேம்குமார் இடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேம்குமார் அதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதனால் அவர் மீதும் அவரது தம்பி  செந்தில்குமார் மீதும் போலீசார் போலியான எஸ்டி எஸ்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே மனமுடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார். எனவே அவரது தற்கொலைக்கு போலீசாரே காரணம் என்று இறந்த பிரேம்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.