தி.மு.க. என்றாலே அராஜகம்… குறுக்குவழியில் வந்தவர் ஸ்டாலின்… எடப்பாடியார் கடும் தாக்கு.

தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த நேரத்தில் தி.மு.க.வை வெளுத்து வாங்கினார்.


இன்றைய தினம் உங்களுடைய அருளாளும், அம்மாவுடைய அருளாளும் முதலமைச்சராக இருக்கின்றேன். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு கிடையாது உங்கள் தந்தை முதலமைச்சர் என்பதால் குறுக்கு வழியில் வந்தீர்கள். என்னைப்போல் கஷ்டப்பட்டு வந்திருந்தால் ஸ்டாலினுக்கு அந்த அருமை தெரிந்திருக்கும்.

ஸ்டாலின் அவர்களுக்கு உழைத்துப் பழக்கம் இல்லை, உழைப்பைப்பற்றி தெரிவதற்கும் வாய்ப்பில்லை. உழைப்பால் உயர்ந்தவன் என்றும் வீழ்ந்துவிட மாட்டான். உங்களுக்கே இவ்வளவு தில் இருந்தால், உழைத்து வந்த எனக்கு எவ்வளவு தில் இருக்கும். இரவல் காலில் நிற்கும் உங்களுக்கு இவ்வளவு வலுவிருந்தால், சொந்த காலில் நிற்கும் எனக்கு எவ்வளவு வலுவிருக்கும்.

இவன் கிராமத்தில் இருந்துதானே வந்திருக்கிறான். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராகிவிடும். அண்ணா தி.மு.க இருபெரும் தெய்வங்களின் சக்தி பெற்ற கட்சி. 

தி.மு.க-காரர்களுக்கு நல்ல எண்ணம் கிடையாது, அவர்களின் தலைவருக்கும் கிடையாது, தொண்டனுக்கும் கிடையாது. தி.மு.க ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்றாலே நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடாக தான் இருந்தது. ஆனால் அண்ணா தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் முதன்மையான விளங்குகின்றோம்.

சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். 2006 தி.மு.க தேர்தல் அறிக்கையிலே நில இல்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எங்கு வழங்கினீர்கள். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்ற பழமொழி ஸ்டாலினுக்குத்தான் சரியாக பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.