11 மாதத்தில் வேலுமணியை சிறையில் அடைப்போம் என்று கே.என்.நேரு எச்சரிக்கை!

ஸ்டாலின் எனக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று அமைச்சர் வேலுமணி கொடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் 11 மாதத்தில் வேலுமணியை சிறையில் அடைப்போம் என்று தி.மு. கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எச்சரிக்கை செய்திருக்கிறார்.


“விபத்தில்” கைப்பற்றிய அ.தி.மு.க.,வை தனது குடும்பக் கம்பெனியாக்கி - அ.தி.மு.க. அலுவலகத்தையும், அதன் பத்திரிகையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேலுமணிக்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது? அமைச்சர் பதவியை தனது சகோதரரின் கம்பெனிகளுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அள்ளிக் கொடுக்கும்” பதவியாக மாற்றி - இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த “கொள்ளையராக” - முதல் “கொள்ளையராக” வலம் வரும் திரு. வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரின் கொரோனா பேரிடர் காலத்து மக்கள் பணி குறித்துப் பேசிட என்ன அருகதை இருக்கிறது?

வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்கு சமம் என்று திரு. வேலுமணியை எச்சரிக்க விரும்புகிறேன். அரசியலில் நேருக்கு நேர் கருத்துச் சொல்லி - ஜனநாயக ரீதியான வாதங்களை எடுத்து வைக்க தகுதியோ, தார்மீக உரிமையோ கொஞ்சம் கூட இல்லாதவர் வேலுமணி.

“பத்திரிகையாளர் அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது”, “டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் திரு. மயில்வாகனன் ஆகியோருக்கு மிரட்டல்”, “கோவை சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தி தளத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜ பாண்டியன் கைது” என்று அடக்குமுறை வெறியாட்டம் போடும் அமைச்சர் வேலுமணி போலீசை துணைக்கு அழைக்கும் ஒரு நிரந்தரமான கோழை!

தமிழகத்தில் “ஒப்பந்த ஊழல்” என்று எடுத்தால் அதில் முதலிடத்தில் இருப்பது அமைச்சர் . வேலுமணி தான். உள்ளாட்சித் துறையில் “சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி என்று 349 ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு” குறித்த விசாரணையில் சிக்கி - துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் ஊழல்கடலில் மூழ்கியிருக்கும் திரு. வேலுமணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சி பணிகள் குறித்தோ, கொரோனா விழிப்புணர்வு பணிகள் குறித்தோ, எங்கள் கழகத் தலைவர் மற்றும் இயக்கத்தினர் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து ஆற்றியுள்ள பணிகள் குறித்தோ பேசுவதற்கு எள் முனையளவும் தகுதி இல்லை.

உள்ளாட்சி துறையில் “ஸ்பிரேயர், கிருமி நாசினி, முகக்கவசம்” வரை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகள் எல்லாம் வேறு வழியாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் கொரனா தடுப்பிற்காக ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு, சிறப்பு அதிகாரி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ஐந்து அமைச்சர்கள் குழு போடும் அளவிற்கு “நிர்வாகம்” தோல்வியடைந்து நிற்கிறது. தலைமைச் செயலாளரே மாநகராட்சி ஆணையரைக் கண்டித்து கடிதம் எழுதி விட்டார். வேலுமணிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்நேரம் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு கோவைக்கு தலை தெறிக்க திரும்பி ஓடியிருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல் எங்கள் தலைவரைப் பார்த்து விமர்சிப்பது - அடித்த கொள்ளையும், அமைச்சர் பதவியும் இருக்கிறது என்ற ஒரே ஆணவத்தில்தானே!

இன்னும் 11 மாதங்கள்தான் திரு. வேலுமணி அவர்களே! “ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது”! பணமும் பதவியும் பின்னே வராது. அடித்த கொள்ளையும், சொத்தும் பின்னே வராது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் காவல்துறை அதிகாரிகளும் வர மாட்டார்கள். ஆனால் அன்றைய தினம் - நீங்கள் ஆடிய ஆட்டத்திற்கும், அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதற்கும்,

அடக்குமுறையை எங்கள் கழகத் தொண்டர்கள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஏவி விட்டதற்கும் - ஒரு முடிவு பிறக்கும். அன்று நீங்கள், பத்திரிகையாளர்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் நிச்சயம் அடைக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நேரு.