தி.மு.க.வின் கதிர் ஆனந்த் ஜெயிச்சுட்டார் சரி, முஸ்லீம் ஓட்டுக்கள் எங்கே போனது? அ.தி.மு.க. நின்றிருந்தால் வெற்றி கிடைத்திருக்குமோ?

அதிகாரபூர்வவாக கதிர் ஆனந்த் வெற்றி மாலை அறிவிக்கப்படும் என்றாலும், கதிர் ஆனந்த் இனி தோல்விக்கு வாய்ப்பு இல்லை. வேலூர் தேர்தலில் நின்ற ஏ.சி.சண்முகத்தை பா.ஜ.க.வின் பினாமியாகத்தான் மக்கள் பார்த்தார்கள்.


அதனால், இஸ்லாமியர்கள் ஓட்டு ஏ.சி.சண்முகத்திற்கு நிச்சயம் விழாது என்றும், வேலூர் தொகுதியில் இருக்கும் 3 லட்சம் இஸ்லாம் வாக்குகளும் அப்படியே கதிர் ஆனந்துக்கு விழுந்து எளிதாக ஜெயிப்பார் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதே ஏ.சி.சண்முகம் முன்னிலைக்கு வந்துவிட்டார். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற முஸ்லீம்கள் நிரம்பிய பகுதிகளிலும் கதிர் ஆனந்தைவிட, அதிகமாக பெற்றுவிட்டார். அதன்பிறகுதான் நிலைமை கொஞ்சம் மாறியது.

ஒரு கட்டத்திற்குப் பிறகு கதிர் ஆனந்துக்கும் ஏ.சி.சண்முகத்திற்கும் கிட்டத்தட்ட பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே போய்க்கொண்டு இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, இஸ்லாமியர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அப்படியே தி.மு.க.வுக்கு விழவில்லை என்பதுதான் உறுதியாகத் தெரிகிறது.

ஏனென்றால், வாக்குப்பதிவு அன்றுதான் காஷ்மீர் விவகாரத்தை அறிவித்தார் மோடி. அந்த விவகாரம் சாதாரண மக்களுக்கே அதிர்ச்சி என்றால், முஸ்லீம்களுக்கு பெரும் அதிர்ச்சி. ஆனாலும், அதையெல்லாம் மறந்து இஸ்லாமியர்கள் ஏ.சி.சண்முகத்திற்கும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், தமிழகம் இன்னமும் மதத்தின் பிடியில் சிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

தி.மு.க. வாக்குக்கு 200 ரூபாயும் அ.தி.மு.க.வினர் வாக்குக்கு 500 ரூபாயும் கொடுத்ததாக சொல்லப்பட்டது. 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வேலூரில் குவிந்து வேலை பார்த்தார்கள். அத்தனை கஷ்டப்பட்டும் வீணாகப் போனது என்றாலும் ஒரு விஷயம் இந்தத் தேர்தலில் நன்றாகத் தெரிந்தது.

ஆம், தி.மு.க.வை அசைப்பது அப்படியொன்றும் கஷ்டம் இல்லை. ஒரு கூட்டணிக் கட்சி வேட்பாளரே இத்தனை வாக்குகள் என்றால், அ.தி.மு.க. நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்.