தமிழகத்தில் நீட் நுழைவதற்கு காரணம் தி.மு.க.! நீட் விவகாரத்துக்கு நாடகம் போடும் ஸ்டாலினுக்கு கண்டனம்.

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தமிழக சட்டமன்றம் அவசரம் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது ஓரளவு கொரோனா தாக்கம் தணிந்திருக்கும் நிலையில், மீண்டும் துவங்கியது.


தமிழக சட்டமன்றம் வழக்கமாக நடைபெறும் கோட்டையில், போதிய இடைவெளி விட்டு அமரமுடியாது என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் கூட்டம் கூடியது. ஏற்கனவே 3 நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். 

இதில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்தனர்.

கூட்டம் கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி கோபாலன், கு.லாரன்ஸ், ஜெமினி கே,ராமச்சந்திரன், மு.ஜான் வின்சென்ட், ஜி.காளான் உட்பட 23 பேரின் மறைவிற்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

இதையடுத்து சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்த ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரமதரை சந்தித்து வலியுறுத்தவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அ.தி.மு.க.வினர், ‘’தி.மு.க. நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் விவகாரம் முதன்முதலில் சட்டமாக கொண்டுவரப்பட்டது. அதனை நீதிமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்த்த நேரத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமே வாதாடினார். தமிழகத்தில் நீட் நுழைவதற்கு முழுக்கமுழுக்க காரணம் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்தான்’’ என்று போட்டுத் தாக்கியுள்ளனர்.