பழனி கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் போனது ஏன் தெரியுமா? ஸ்டாலின் குருபெயர்ச்சி என்ன சொல்லுது?

கருணாநிதி குடும்பத்தில் பெரும்பாலோர் நாத்திகர்கள். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நாத்திகம் பேசினாலும் ஸ்டாலினுக்காக அவரது மனைவி துர்காவும் கனிமொழிக்காக அவரது அம்மா ராஜாத்தியும் கோயில் கோயிலாக ஏறி இறங்குவார்கள்.


அந்த வகையில் திடீரென குரு பெயர்ச்சியை முன்னிட்டு பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சென்று பூஜை செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின். 

பழனி தண்டாயுதபானி சுவாமிக்கு நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்துகொண்ட துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் முடிந்தபின் பரிகார பூஜை நடத்தி கிளம்பிச் சென்றார்.

என்னவென்று விசாரித்ததில் ஸ்டாலினுக்கு குருபெயர்ச்சி முன்னிட்டு இருந்த சிறு தடை நீக்குவதற்குத்தான் முருகப்பெருமானை தரிசித்து பரிகார பூஜை செய்ததாகச் சொல்கிறார்கள். ஸ்டாலினுக்கு சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். இந்த குருபெயர்ச்சி படி கோச்சார ரீதியாக குரு சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்கிறார். குரு பகவான் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. அவர் ஐந்தாம் வீட்டில் அமரப்போகிறார். இது ஸ்டாலினுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறதாம். இன்னும் சொல்லப்போனால் இதுதான் ஸ்டாலினுக்குப் பொற்காலம்.

ஆனால், சின்னச்சின்ன குழப்பங்களும், தடங்கல்களும் இருப்பதாக ஜோதிடர் தெரிவித்து இருப்பதால் சிக்கல் தீர்க்கும் தண்டாயுதபாணியை தரிசனம் செய்து பரிகாரம் செய்திருக்கிறாராம்.

எப்படியோ ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது என்கிறார்கள்.

மக்களை நம்பாமல் இப்படி கோயிலுக்கு அலைகிறாரே என்று தி.மு.க.வினர் நொந்துகொண்டாலும் துர்கா ஸ்டாலின் இதை கைவிட மாட்டாராம். ஏன் என்றால், இந்துக்கள் வாக்குகள் வேண்டுமே...