அரியலூர் சிவசங்கருக்கு எதிராக சதி..! தி.மு.க.வில் உட்குத்துக்கு ஸ்டாலின் பஞ்சாயத்து

சென்னை: உள்கட்சி சதி காரணமாக நான் படிப்படியாக சரிந்துகொண்டிருக்கிறேன், என்று அரியலூ மாவட்ட திமுக செயலாளர் குமுறியுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றாலும், கட்சி நிர்வாகிக்குள்ளேயே நிலவிய பூசல் காரணமாக, உள்ளடி வேலை பார்த்து ஒருவரை ஒருவர் வீழ்த்தியுள்ளதாக, தகவல் தெரியவந்தது. இதுபற்றி கேள்விப்பட்டதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, அவசர செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.   

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு கட்சிக்குள்ளேயே நிலவும் சதி வலைகள் பற்றி ஸ்டாலினிடம் தனியாகப் பேசி புலம்பியுள்ளனர். குறிப்பாக, திமுக.,வுக்கு பின்னடைவு ஏற்பட்ட கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சதிகள் பற்றி தகுந்த ஆதாரங்களுடன் ஸ்டாலினிடம் தனித்தனியாக விவரித்தனர். 

குறிப்பாக, அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், கூட்டம் முடிந்த பிறகும், ஸ்டாலினை தனியாக சந்தித்து, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக புலம்பியுள்ளார். டி.பழுர் பகுதி திமுக ஒன்றிய செயலாளராக இருந்த கண்ணன் மற்றும் திருமானுர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர்களாக உள்ளவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு எதிராக ஆ.ராசாவிடம் பொய்த்தகவல்களை சொல்லி புகார் செய்வதாக, சிவசங்கர் குறிப்பிட்டிருக்கிறார். 

இவர்களின் உள்ளடி வேலையால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வெறும் 2ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி நேரிட்டது. இதேபோல, தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்சிக்குள்ளேயே மறைமுகமாக இப்படி சதித்திட்டம் தீட்டுவது நன்றாக இல்லை என, சிவசங்கர் குறிப்பிட்டதோடு, இவர்கள் மீது பலமுறை புகார் கூறியும் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன், எனவும் கேட்டிருக்கிறார்.   

இதேபோல, நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் தனது கஷ்டத்தை விவரித்துள்ளார். ஆனால், அதுபற்றி ஸ்டாலின் காது கொடுத்து கேட்கவில்லையாம். கடுகடுவென பேசியதாகக் கூறப்படுகிறது. சிவசங்கர், முபாரக் போன்ற மாவட்ட செயலாளர்கள், ஸ்டாலினின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள். ஆனால், இவர்களுக்கு எதிராகவே கட்சிக்குள் ஆ.ராசா தரப்பினர் சதி வலை பின்னுவதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் தவிப்பதாகவும் திமுக மூத்த நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.