தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவு - பிறந்த நாளில் சோகம்!

சென்னை, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 62.


சென்னை, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 62. கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 2ஆம் தேதி சென்னையை அடுத்த குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாள்களில் அவருடைய ஆக்சிஜன் உள்வாங்கும் திறன் குறைந்து செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமான நிலைக்குச் சென்றது. பின்னர் செயற்கை ஆக்சிஜன் அளவு குறைந்து முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார். நேற்று முன் தினம் திடீரென மீண்டும் அன்பழகனின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனைக்கு ஸ்டாலினும் இந்திய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனும் விரைந்தனர்.

அன்பழகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அன்பழகனுக்கு சிறுநீரகக் கோளாறு உள்பட்ட சில நாள்பட்ட உடல்நலிவுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த அன்பழகனின் பிறந்த நாளில் அவர் உயிரிழந்ததை கட்சியினரும் உறவினர்களும் சோகத்துடன் குறிப்பிடுகின்றனர்.