தி.மு.க கூட்டணியில் கவுண்டர்கள் கட்சிக்கு ஒரு சீட்! நாமக்கல்லை ஒதுக்கினார் ஸ்டாலின்!

தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் சீட்டை ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.


தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு மட்டுமே இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த தொகுதி என்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் மதிமுக, விசிகவுக்கான தொகுதி உடன்பாட்டில் தற்போது வரை சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினர்.

அப்போது மூன்று தொகுதிகளைஅந்த கட்சி கேட்டது. ஆனால் ஒரே ஒரு தொகுதியை மட்டும் திமுக இறுதி செய்தது. இதனை ஏற்ற கொங்கு நாடு மக்கள் கட்சி திருப்பூர் தொகுதியை தருமாறு தி.மு.கவிடம் கேட்டது. ஆனால் திருப்பூரை கம்யுனிஸ்ட்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூறியது.

இதனை தொடர்ந்து நாமக்கல் தொகுதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

சென்னைஅண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் – தி.மு.க தலைவர் ஸ்டாலின் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது.

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து பொள்ளாச்சி தொகுதியில் களம் இறங்கிய ஈஸ்வரன் தோல்வி அடைந்தார். இந்த முறை நாமக்கல் தொகுதியிலும் அவரே களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.