தி.மு.க கூட்டணி விவகாரம்! கேப்டன் மகன் – மைத்துனர் இடையே மல்லுக்கட்டு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் இடையே மீண்டும் பனிப்போர் ஆரம்பமாகியுள்ளது அண்மைக்கால சம்பவங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தே.மு.தி.கவில் விஜயகாந்த், பிரேமலதாவிற்கு பிறகு அதிகாரம் மிக்க நபர் எல்.கே.சுதீஷ். இவர் தான் விஜயகாந்தின் படங்கள் தயாரிப்பு தொடங்கி தற்போது தே.மு.தி.கவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் நிர்வாகம் வரை அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

தே.மு.தி.கவின் ஐ.டி விங்க், இளைஞர் அணி போன்ற முக்கியமான அமச்ங்களும் சுதீஷ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. போதாக்குறைக்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழுவுக்கும் சுதீஷ் தான் தலைவர். தே.மு.தி.கவின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பும் சுதீஷ் வசம் உள்ளது.

இப்படி தே.மு.தி.கவில் மிக முக்கிய நபராக சுதீஷ் வலம் வரக் காரணம் அவர் மீது கேப்டன் வைத்துள்ள நம்பிக்கை தான். இதே போல் பிரேமலதாவும் சுதீஷ் மீது அதிக அன்பு கொண்டவர். இதனால் தே.மு.தி.கவில் தற்போது வரை அசைக்க முடியாத சக்தியாக சுதீஷ் வலம் வருகிறார்.

ஆனால் கேப்டன் – பிரேமலதாவின் வாரிசான விஜய் பிரபாகரன் அரசியல் களத்தில் இறங்கிய பிறகு தான் பிரச்சனை உருவாக ஆரம்பித்துள்ளது. சுதீசுடன் ஒப்பிடுகையில் விஜய் பிரபாகரனின் வயதும் சரி அனுபவமும் சரி ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் சுதீஷின் ஒரே லட்சியம் எம்.பியாக வேண்டும் என்பது தான். எம்.பியாக மத்திய அமைச்சராக வேண்டும் என்பது சுதீஷின் பல ஆண்டு கால கனவு.

இதற்காக இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் சுதிஷ்க்கு தோல்வி தான் கிடைத்தது. இதே போல் 41 எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் சுதீஷால் ராஜ்யசபா எம்.பி ஆக முடியவில்லை. எனவே இந்த தேர்தலில் எப்படியும் வலுவான கூட்டணியில் இணைந்து எம்.பியாகி விட வேண்டும், வாய்பிருந்தால் மத்திய அமைச்சர் என்கிற எண்ணத்தில் சுதீஷ் உள்ளார்.

தற்போதைய சூழலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் எளிதாக எம்.பியாகலாம் என்பது சுதீஷின் எண்ணமாக உள்ளது. இதனால் தி.மு.க தரப்பில் சரியான சேனலை எதிர்பார்த்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை சுதீஷ் உருவாக்கி வருகிறார். இதே போல் பா.ம.க வரவில்லை என்றால் தே.மு.தி.கவுடன் கூட்டணிக்கான வாய்ப்பை பற்றி யோசிக்க தி.மு.கவும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தான் திடிரென சென்னையில் நடைபெற்ற கொடி நாள் விழாவில் விஜய் பிரபாகரன் தி.மு.கவை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதுவும் தனது தந்தை 1000 மடங்கு ஸ்டாலினை விட சக்தி மிக்கவர் என்றும் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சுதீஷ் தி.மு.கவுடன் கூடட்ணிக்கு வழி மேல் விழி வைத்து காத்துள்ளார். இந்த நிலையில் விஜய் பிரபாகரன் ஸ்டாலினை விமர்சித்துள்ளது சுதீஷ்க்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். இதனால் கேப்டன் டிவியில் ஸ்டாலின் குறித்தும் தி.மு.க குறித்து விஜய் பிரபாகரன் பேசிய எதையும் சுதீஷ் ஒளிபரப்பவில்லை.

இதே போல் கேப்டன் தொலைக்காட்சியின் YouTube பக்கத்தில் கூட விஜய் பிரபாகரனின் முழு பேச்சையும் அப்லோட் செய்யவில்லை. இதற்கு விஜய் பிரபாகரன் பேச்சால் ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை தான் என்கிறார்கள். ஏற்கனவே விஜய் பிரபாகரன் அரசியல் களத்திற்கு வந்த போதே சுதீஷ் சிறிது தயங்கியதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க மீதான விமர்சனம் விவகாரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.