மண்ணின் மைந்தன் நான்! விக்கிரவாண்டியில் போட்டியிடும் வ.கவுதமன்! தூத்துக்குடி என்ன ஆச்சு?

வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக, அதிமுக கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியை நடத்துபவருமான கவுதமன் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.


அக்டோபர் மாதம் 21ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி, அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். 

அதேபோல் நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் வெ.நாராயணன் போட்டியிடுகிறார். பெரும் பலம் வாய்ந்த கட்சிகள் மோதிக்கொள்ளும் இந்த தேர்தல் எனும் போர்க்களத்தில் இயக்குநர் கவுதமனும் சுயேட்சை சிப்பாயாக போட்டியிட முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கவுதமன் கூறியபோது தானும் இந்த மண்ணின் மைந்தான் என்றும் அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். வெற்றி தோல்வியை தெரிந்து கொள்ள போர் வீரனாக இருந்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி போராடவேண்டும் என்றும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவே தேர்தலில் போட்டி என விளக்கம் அளித்துள்ளார் தமிழ் பேரரசு கட்சியை நடத்தும் கவுதமன். 

ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களம் கண்டது என பல போராட்டங்களில் பங்கேற்ற கவுதமன், கத்திப்பாரா பாலத்தை பூட்டு போட்டு பூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியவர் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கவுதமன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து பிறகு வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் கவுதமன்.