சிறுவனின் பெற்றோரிடம் சமாதானம் பேசி முடித்த சீனி - செருப்பு விவகாரத்தை முடிக்கும்போதும் ஆட்சியர் சாட்சி!

நீலகிரி மாவட்ட அரசு விழாவில் தன் செருப்பைக் கழற்ற பழங்குடியினச் சிறுவனைப் பயன்படுத்தி, மனித உரிமை மீறல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார், வனத்துறை அமைச்சர் சீனிவாசன்.


அவரின் இந்தச் செய்கைக்கு எதிராக பரவலாக எதிர்ப்பு வலுத்ததுடன், பாதிகக்ப்பட்ட சிறுவன் தரப்பில் மசினகுடி காவல்நிலையத்தில் அமைச்சர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்டத்திலேயே முகாமிட்டார் அமைச்சர் சீனி.

மாவட்ட அரசு பயணியர் விடுதியில் தங்கிக்கொண்டு, வனத்துறையினரின் வாகனத்தில் சிறுவனையும் அவரின் பெற்றோரையும் அழைத்துவரச் செய்து, பேசினார். இரண்டு மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், என்ன நடந்தது என்பது குறித்து புகார் கொடுத்த சிறுவனை யாரும் பேசவிடவில்லை. அவனின் தாயாரே பேசினார்.

பிரச்னைக்குத் தொடர்பில்லாமல், தங்களின் ஊர் பிரச்னைகளை அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் அவற்றைத் தீர்த்துவைப்பதாக உறுதிகூறியதாகவும் அவர் கூறினார். மேலும், தனக்கு ஓய்வூதியமும் தன் மகளுக்கு வேலையும் வழங்குவதாக அமைச்சர் கூறியதாகவும் அந்தப் பெண்மணி தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேச்சின்போது ஆட்சியரும் உடனிருந்திருக்கிறார்.

கடைசிவரை அமைச்சர் சீனி, வருத்தம் மட்டுமே தெரிவித்ததாகக் கூறினாரே அன்றி, தன்னுடைய செய்கைக்காக மன்னிப்பு கேட்கவே இல்லை. பேரன் வசனத்தை மீண்டும் நியாயப்படுத்தி கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு உரியபடி பதில்கூறாமல் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

பேச்சுவார்த்தையில் சிறுவனின் தாயார் வழக்கைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதற்காகவா, ஓய்வூதியம், அரசுப் பணி உறுதிமொழிகள் வழங்கப்பட்டன என்பது இன்னொரு பிரச்னையாக உருவெடுத்துவருகிறது.