5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி! திண்டுக்கல்லில் அலைமோதிய கூட்டம்! ஆனால்...?

திண்டுக்கலில் உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி என்று அறிவித்தை அடுத்து பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.


உலகம் முழுவதும் அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், இத்தினத்தை கொண்டாடும் நோக்கத்தில் திண்டுக்கலில் உள்ள ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையில், காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர். ஆனால் பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நேரம் 12 மணி. பிரியாணியை வாங்குவதற்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வரிசையில் காத்திருந்தனர். 

இதனையடுத்து, 12 மணிக்கு பிரியாணி கடை திறக்கப்பட்டு, 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டு 100 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் உள்ள செய்தியாளர்கள் கடையின் உரிமையாளரிடம் 5 பைசாவுக்கு பிரியாணி பற்றி கேட்கையில் ஒரு சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். 

அது என்னவென்றால், நமது தமிழர்களின் பழங்கால தொன்மையை பற்றி தற்போது கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. அதே போல் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம் என்று மிகவும் பெருமையுடன் கூறுகிறார் கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான். இதில் என்ன அச்சிரியம் என்றால், ஏராளமானோர் செல்லாத 5 பைசா நாணயங்களை வைத்திருந்தது மிகவும் மனதிற்கு நெகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

மேலும், அவர் பாரதியின் கவிதையை உதரணமாக கூறினர், தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று மகாகவி பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி, உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

நமது வருங்கால தலைமுறையினரும் நாணயத்தின் மதிப்பை உணர்வதோடு மட்டுமின்றி பசியில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 5 பைசாவுக்கு பிரியாணி என்று அறிவித்துள்ளார்.