தங்கதமிழ்செல்வன் ஆடியோவை வெளியிட்டதே டிடிவி தான்! பன்னீர் காலில் விழுவாரா? ஸ்டாலின் பக்கம் சாய்வாரா?

கடந்த 20ம் தேதி தங்கதமிழ்ச்செல்வனை தன் வீட்டிற்கு அழைத்து விசாரணை நடத்திய தினகரன், அவரை கண்டித்ததாக செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது.


இந்த விவகாரம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியபோதும் தங்கதமிழ்செல்வன் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான், நேற்று தேனியில் ஒரு ரகசிய கூட்டத்தை அ.ம.மு.க. ஏற்பாடு செய்திருக்கிறது. காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய கொள்கை பரப்புச் செயலாளராக யாரை நியமிப்பது என்று பேசப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தெரிந்துதான் தங்கதமிழ்செல்வன் கொந்தளித்தாராம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை தொழிற்சங்க நிர்வாகி செல்லப்பாண்டியனிடம் தன்னுடைய குமுறலைக் கொட்டிவிட்டார். உடனே அவர் அதனை தினகரனுக்கு ஆடியோவாக  அனுப்ப, அடுத்த நிமிடம் ஐ.டி. விங்க் மூலம் அனுப்பிவிட்டார் தினகரன்.

தான் பேசிய விவகாரத்தை இப்படி தினகரன் வெளியே விடுவார் என்று எதிர்பார்க்காத தங்கம் அப்செட். இவருக்கு இப்போது தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் அழைப்பு இருந்தாலும், சட்டென முடிவெடுக்கும் மனநிலையில் தங்கம் இல்லை. இந்த நிலையில் இன்று தங்கதமிழ்செல்வன் பற்றி தானே முன்வந்து பேட்டி கொடுத்தார் தினகரன்.

மீடியாக்கள் தங்கதமிழ்செல்வனை பெரிய ஆளாக சித்தரித்த காரணத்தால் ஏமாந்துவிட்டார் என்றும், அவர் விஸ்வரூபம் எடுக்க மாட்டார், பெட்டிப்பாம்பாக அடங்கியிருப்பார் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் வெற்றிவேல், ‘தங்கதமிழ்செல்வனுக்கு மனநிலை தவறிவிட்டது‘ என்று கிட்டத்தட்ட பைத்தியம் என்றே சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் அடுத்தகட்ட ஆலோசனைக்காக அருகில் இருக்கும் கேரளாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார் தங்கதமிழ்செல்வன். ஓ.பி.எஸ். காலில் பெட்டிப்பாம்பாக விழப் போகிறாரா அல்லது தி.மு.க.வில் சேர்ந்து விஸ்வரூபம் எடுக்கப்போகிறாரா என்பது நாளை தெரிந்துவிடும்.