எடப்பாடி கட்சியில் இணைந்துவிட்டாரா தலைமைச் செயலாளர் சண்முகம்? ஜெயலலிதா ஆட்சியைவிட எடப்பாடி ஆட்சிதான் பெஸ்ட் என்கிறார்!

அரசு உயர் அதிகாரிகள் அனைவருமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜால்ரா போடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த சமாசாராம்தான். ஏனென்றால், அப்படிப்பட்ட நபர்களைத்தான் அந்த இடத்தில் அமர வைப்பார்கள்.


ஆனால், ஒரு கட்சிக்காரர் போன்று தமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டிப் பேசியிருப்பதை அனைத்துக் கட்சியினரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்தான் அப்படியொரு சம்பவம் அரங்கேறியது. 

அந்த விழாவில் பேசிய சண்முகம், "தமிழ்நாட்டில் நெருக்கடியான காலங்களில் எல்லாம் திறம்பட செயலாற்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார் முதல்வர் பழனிசாமி. முதல்வர் எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திக்கிறார் மக்களுக்காகவே சிந்திக்கிறார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஏழை எளிய மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்திருக்கிறார்.

பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு உதவிகரமாக இருக்கிறார். அந்த அளவுக்கு தமிழகத்தை மிகப் பாதுகாப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருக்கிறது. 

2006 -11 ஆட்சி காலத்தைவிட 2011- 16 ஆட்சி, அடுத்து தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த நான்காண்டு கால ஆட்சியில் தான் 40,000 கோடி ரூபாய் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் செலவிடப்பட்ட பட்டிருக்கிறது” என்ற ரீதியில் பாராட்டி பேசியிருக்கிறார். 

சண்முகத்தின் பேச்சைக் கேட்டு அத்தனை கட்சியினரும் ஆடிப்போய் இருக்கிறார்கள். தலைமைச் செயலாளரே இப்படிப் பாராட்டிப் பேசினால், இனி கவர்களும் துறை செயலாளர்களும் எப்படியெல்லாம் பேசப்போகிறார்களோ?