நேர்த்திக்கடனுக்காக தலையில் தேங்காய் உடைப்பதை நீதிமன்றம் ஆதரிக்கல்லாமா..? கொந்தளிக்கும் வீரமணி.

மத வழக்கப்படி நேர்த்திக் கடன் என்ற பெயரால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பதைத் தடை செய்ய முடியாது என்றும், அது மத வழக்கம் - நேர்த்திக் கடன் என்றும், அதில் நீதி மன்றம் தலையிட முடியாது என்றும் மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அதிர்ச்சிக்குரிய தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆடி18 மற்றும் 19ஆவது  நாட்களில் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும. இந்தக் கோவிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பது என்கிற  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூடத்தனம் நடந்து கொண்டுள்ளது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்கூட நடத்தியதுண்டு.

ஆபத்தான செயலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு இந்த ஆபத்தை விளைவிக்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் நியாயமான வழக்கொன் றினை  மகாலட்சுமி மும்முடியார் குல நல சங்கம் சார்பில் தொடுக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைப்பதால் பலருக்கும் காயங்கள் ஏற்படுகின்றன, உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதியின் தீர்ப்பு

இது குறித்து மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஆர். சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில், “பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வழக்கம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் மட்டுமல்ல; தமிழகத்தில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது.

தலையில் தேங்காய் உடைப்பதுபோல பக்தர்கள் தங்களை வருத்திக் கொள்ளும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தீ மிதித்தல் எனும் வழிபாடு தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. எங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கோவில்  இருக்கிறதோ, அங்கெல்லாம் அலகு குத்தும் வழிபாடு நடக்கிறது.

தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டி அது நிறைவேறியபின் நேர்த் திக் கடனாக உடலை வருத்திக் கொள்ளும் இத்தகைய வழிபாடுகளை பக்தர்கள் மேற் கொள்ளுகின்றனர். மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையால் வெவ்வேறு முறைகளில் வழிபாடுகளை மேற் கொள்ளுவது பழங்காலத்திலே இருந்துள்ளது. கலிங்கத்துப் பரணி’ நூலில் போரில் வென்றபின் காளி தெய்வத்துக்குப் போர் வீரன் தலையை வெட்டி காணிக்கையாக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பக்தர்களின் விருப்பப்படி நிறைவேற்றிக் கொள்ளும் வழிபாடு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நடத்தி வருகின்றனர். ஒரு சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம். கடவுள் வழிபாட்டில், பூஜைக் காரியங்களில் இந்த நீதிமன்றம் எந்தக் கொள்கையையும் பரப்பவில்லை. தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்று நிர்ப் பந்திப்பதாக பக்தர்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை.

எனவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறையை நிறுத்தும்படி உத்தர விடுவது தேவையற்றது; நியாயமற்றது; மதசுதந்திரத்தில் தேவையின்றி குறுக்கிடுவது போலாகி விடும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியின் இத்தீர்ப்பு அதிர்ச்சிக்குரியது. மனித உயிருக்கு ஆபத்து களை விளைவிக்கக் கூடிய ஒரு செயலுக்கு அரண் அமைப்பதாக உள்ளது. நீண்ட காலமாக ஒன்று நடைபெற்று வருவது என்பதாலேயே அது ஏற்றுக் கொள் ளப்பட முடியுமா?  

இதே மதுரைக்கு அருகில் (பேரையூரில்) குழிமாற்றுத் திருவிழா என்ற கோவில் திருவிழா நடைபெறவில்லையா? குழந்தை யைக் குழிக்குள் போட்டு மூடி, கொஞ்ச நேரம் கழித்து, வெளியே எடுப்பது என்ற கொடூர நேர்த்திக் கடன் வழக்கில் இருந்ததுதான். அதற்காக அதனை தடை செய்யவில்லையா? புதுச்சேரி  மாநிலம் அம்பகரத்தூரில் காலங் காலமாக நடந்து வந்த எருமைக்கிடா வெட்டு நிகழ்ச்சியை அரசு சட்டம் போட்டுத் தடுக்கவில்லையா? 

சென்னை - பிரபல நரம்பியல் டாக்டர் திலோத்தமை“தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும்... தலையில் உள்ள எலும் புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான்; ஒரு குழந்தையைக் குலுக்கினாலேகூட மூளை ஆடலாம் என தெரிவித்துள்ளார். ஆகவே, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.