தியாகி உதயநிதியை ஓடிப்போய் பார்த்த தயாநிதி!

தலைவர் வீட்டில் நாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலும் தொண்டர்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று நலம் விசாரிக்க வேண்டும் என்பதுதான் அரசியலில் எழுதப்படாத சட்டம். அப்படித்தான் தி.மு.க.வில் நடந்துகொண்டு இருக்கிறது.


நேற்று முதன்முறையாக வரலாற்றில் தன்னுடைய தியாகத்தை பதிவு செய்யும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார் உதயநிதி. காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்படுவார் என்பது குழந்தைக்கும் தெரியும் என்றாலும், சும்மா இருந்துவிட முடியுமா?

கைது செய்யப்பட்ட உதயநிதியை ஒய்.எம்.சி.ஏ. திடலில் காவலில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் தி.மு.க. தலைவர்கள் ஓடோடிப் போய் பார்த்து உதயநிதிக்கு துணையாக நின்றார்கள். இப்படி அவசரப்பட்டு வந்துட்டீங்களே, எங்களையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்போமே என்று துரைமுருகன் உள்ளிட்ட பெரும்புள்ளிகள் கலங்கி நின்றார்கள்.

துரைமுருகன் போய்விட்டார் என்று தகவல் தெரிந்ததும் அலறியடித்து ஓடிவந்தார் தயாநிதி. நாட்டில் இத்தனை பெரிய அநியாயம் நடந்திருக்கிறது, யாருமே எங்ககிட்டே சொல்லவே இல்லை என்று தயாநிதி டென்ஷன் ஆகியிருக்கிறார். 

யார் யாரெல்லாம் வந்து ஆறுதல் சொல்கிறார்கள் என்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாராம் உதயநிதி. இந்த விஷயம் தெரியவந்ததும் மேலும் பல தலைவர்கள் படையெடுத்து வந்தனர். இது தெரியவே, உடனே போலீஸ் உதயநிதியை வெளியே விரட்டியே விட்டது.

பாவம், தி.மு.க. தலைவர்கள் ஏமாந்து போனார்கள்.