தருமபுரி மாவட்டம் தொப்பூர், கணவாய் இடையே நள்ளிரவில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதற்கு பேய்கள் உலாவுவதே காரணம் என புரளி கிளம்பிய நிலையில் அங்குள்ள பகுதி மக்கள் செலவு செய்து கோயில் ஒன்றை கட்டியுள்ளனர்.
ஒரே ஆண்டில் 40 விபத்துகள்! 50 பேர் பலி! மரண சாலையான தொப்பூர் கணவாய் சாலை! காரணம் அமானுஷ்ய சக்திகளா? பீதியில் வாகன ஓட்டிகள்!

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 'தொப்பூர் கணவாய்'. சாலை தொப்பூர் கிராமம் அருகே உள்ளது.
சேலத்தில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்திலும், தருமபுரியில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்திலும் உள்ளது தொப்பூர் கிராமம். இங்கு 3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை மலைகளும் காடுகளும் அடர்ந்த வனப்பகுதியாகும். தமிழகத்திலேயே அதிகமாக நடைபெறும் விபத்து பகுதியாக தொப்பூர் கணவாய் சாலை பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 40 விபத்துகள் நடந்து 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கார்மீது நூல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் எவ்வளவு கவனமாக வாகனம் ஓட்டினாலும், இரவில் பேய்கள் உலாவுவதால் விபத்து ஏற்படுவதாக சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர்.
இந்த புரளியை நம்பி சில வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட தூரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று பொழுது விடிந்தவுடன் செல்கிறார்களாம். இதனால் அப்பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோயில் கட்டியிருக்கிறார்கள். இந்த 3.5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதி என்பதால் அபாயகரமான வளைவுகள் அதிகமாக உள்ள சாலையாகும்.
எப்படி மலைப்பகுதியில் வாகனத்தை இரண்டாவது கியரில் செல்கிறோமோ அப்படித்தான் இந்த சாலையில் செல்ல வேண்டும் என்கிறார்கள். எனவே இந்த பகுதியில் 2வது கியரில் மட்டுமே வாகனத்தை இயக்குமாறு குறிஞ்சி நகர் சுங்கசாவடியில் ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கிறார்கள்.