ஸ்டாலினுடன் பேசிய டிஜிபி! தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்பட்டதன் பரபரப்பு பின்னணி?

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால், உடனே மண்டபம் முகாமுக்கு மாற்றிவிடுவார்கள். ஏற்கெனவே அலெக்சாண்டர், ஜாபர் சேட் போன்றவர்கள் ஜெயலலிதாவின் கோபத்தினால் அங்கே போயிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது எடப்பாடியின் அதிரடி காரணமாக அஸ்தோஷ் சுக்லா, மண்டபம் முகாமுக்குப் போயிருக்கிறார்.


இந்த மாற்றத்துக்குக் காரணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரம் என்றும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்றும் மாறுபட்ட கருத்துகள் உலா வருகின்றன. தேர்தல் நேரத்தில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, சுக்லா, சிறைத்துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது, தஞ்சையில் திருமலைச்சமுத்திரம் என்ற இடத்தில் சிறைசாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.

சிறைச்சாலை அமைய இருக்கும் இடத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கைப்பற்றி இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அதனை கைப்பற்ற சுக்லா தீவிர முயற்சி எடுத்தார். அந்த பல்கலையின் நிர்வாகத்துக்கு ஆதரவாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இருந்த சூழலில் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்த நேரத்தில்தான் தேர்தல் நேர டிஜி.பியாக நியமனம் செய்யப்பட்டார்.

மீண்டும் அவர் சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டால் சாஸ்த்ரா நிர்வாகத்துடன் மோதுவார் என்பதாலே மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது அதே நேரம், தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாக அவர் நடந்தார் என்றும் ஸ்டாலினுடன் பல நேரம் தொலைபேசியில் உரையாடியது டேப் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனாலே மாற்றம் செய்யப்பட்டாராம்.

இந்த நிலையில் சுக்லா மண்டபம் முகாமில் பொறுப்பு எடுத்துக்கொண்டார். அங்கே அவருக்கு ஒரே ஒரு அறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாக ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டரும், ஒரே ஒரு போலீஸ்காரரும் மட்டும் இருக்கிறார்கள். ஆக, எடப்பாடியும் பழி வாங்கும் வேலையை ஆரம்பிச்சுட்டாரே…