மணல் மாஃபியாக்களை ஓட ஓட விரட்டிய பெண் அதிகாரி! ஆனால் அவருக்கு நேர்ந்த பரிதாப நிலை!

தேவிகுளம்: ஒருநாள் கூட வீணாக்காமல் எனது பணியை செய்துள்ளேன், என்று தேவிகுளம் மாவட்ட உதவி ஆட்சியர் ரேணு ராஜ் தெரிவித்துள்ளார்.


தேவிகுளம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணிபுரிவோர், சில மாதங்களிலேயே திடீரென வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, அம்மாவட்டத்தில், கடந்த 10 மாதங்களுக்கு முன், உதவி ஆட்சியராக பதவியேற்ற ரேணு ராஜ், தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.  

கடந்த 9 ஆண்டுகளில், இவ்வாறு தேவிகுளம் மாவட்டத்தில் இருந்து மாற்றப்படும் 16வது உதவி ஆட்சியர் ரேணு ஆவார். அம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள், நில அபகரிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரேணு ராஜ் இடம் மாறுதல் செய்யப்படுவதாக, ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதுபற்றி தி நியூஸ் மினிட் ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள ரேணு ராஜ், ''2018 நவம்பர் மாதம் பதவியேற்றது முதலாக, எனது கடமையை முடிந்தவரை சரியாகச் செய்ய தீர்மானித்தேன். அப்படியே செயல்பட்டேன். மூணாறு உள்பட பல இடங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டேன்.

இதற்காக அரசியல் ரீதியாக நிறைய குடைச்சல்கள் எனக்கு தரப்பட்டன. குறிப்பாக, எனது பணிகளில் நான் முக்கியமாக நினைப்பது, குட்டியாறு பள்ளத்தாக்கு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, வீடில்லாத பொதுமக்கள் 2000 பேருக்கு வீட்டு மனையாக பகிர்ந்து அளிக்கும் திட்டத்தை மேற்கொண்டதுதான்.

அந்த திட்டம் தற்போது பாதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனக்குப் பின் வரும் புதிய உதவி ஆட்சியர் அதனை வெற்றிகரமாக முடித்து வைப்பார் என நினைக்கிறேன். இதுவரை நான் ஒருநாள் கூட வீணடிக்காமல், எனது கடமையை சரியாகச் செய்துள்ளேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.