போற்றி பாடடி பெண்ணே..! தேவர் காலடி மண்ணே..! பாடலுக்கு.. தலித்துகளிடம் இப்போது மன்னிப்பு கேட்ட கமல்! காரணம் இதுதான்!

தேவர் மகன் படத்தில் வரும் பாடலுக்கு தற்போது மன்னிப்பு கேட்பதாக கூறிய கமலஹாசன் தென் ஆப்பிரிக்காவிலும் சாதிய பேரை சொல்லித்தான் அழைப்பார்கள் ஆனால் அங்கு அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது குறித்து அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


நடிகர் கமலஹாசன் சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த படம் தேவர்மகன். இதில் வரக்கூடிய ஒரு பாடல் ஆதிக்க சாதியை போற்றிப் பாடும் வகையில் அமைந்துள்ளதாகவும், படத்தின் தலைப்புகளும் தேவர் மகன், சபாஷ் நாயுடு என்று சாதிய பெயரை கொண்டதாக இருப்பதாகவும் இதனால் சாதிய வன்முறை வெடிக்கக் கூடும் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதில் அளித்து பேசிய கமலஹாசன் தேவர்மகன் படத்திற்கு அந்த காலகட்டத்தில் அப்படி ஒரு பெயர் தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது தேவர் மகன் போல் ஒரு படம் எடுத்தால் அதற்குப் பெயர் சாதிய ரீதியாக வைக்கப்படமாட்டாது என்றும் இன்றைய சூழ்நிலைக்கு அது தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும் நோயின் பெயரை சொல்லித்தான் நோயை ஒழிக்க முடியும், அதுபோல சாதிய பேரை சொல்லித்தான் சாதியை ஒழிக்க முடியும் என்றும் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

கமலகாசன் பேச்சுக்கு கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், மற்ற மாநிலத்திற்கு இல்லாத சிறப்பு தமிழ் நாட்டிற்கு உண்டு. சாதியின் பெயரை பின்னால் இருந்து தூக்கி பொதுவெளியில் சாதிப்பெயரை சொல்லாத நிலை இருக்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழகம். அப்படி ஒரு மாநிலத்தில் இவ்வாறு சாதி தலைப்புகளை வைப்பதும் பாடல்களை எழுதுவதும் வன்முறையை தூண்டுவது போல தான் அன்றைய காலகட்டத்திலும் அமைந்தது, இன்றைய காலகட்டத்திலும் அமைந்துள்ளது என்று கூற, இதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன் அன்றைய காலகட்டத்தில் இது ஒரு படத்தின் கதாநாயகனை புகழ்ந்து பாடுவதற்காக அப்படி ஒரு பாடலை எழுதினோமே தவிர ஒரு ஆதிக்க சாதியை புகழ்ந்து பாராட்டுவதற்காக வைக்கப்படவில்லை.

வேண்டுமானால் அந்த பாடலை எழுதிய வாலி சார்பாகவும் இசையமைத்த இளையராஜா சார்பாகவும் தற்போது அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் தென் ஆப்பிரிக்காவில் அனைவரையும் சாதியின் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள் உதாரணமாக அங்கு செருப்பு தைப்பவர்கள் சூமேக்கர் என்று அழைப்படுவார்கள் ஆனால் அது அங்கு அவமானமாக பார்க்கப்படுவதில்லை. இங்கு அவமானமாக பார்க்கப்படுகிறது இந்த நிலை காலப்போக்கில் ஒழியும் அதற்காக நாங்கள் துணை நிற்போம் என்றார் கமலஹாசன்.

ஆனால் அந்த திரைப்படத்தில் அந்த கால கட்டத்தில் இந்த பாடல் தலித்துகளை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த பாடலை போடும் போதெல்லாம் தேவர் - தலித் இடையே சில இடங்களில் மோதல் மூண்டது. இந்த நிலையில் அந்த தவறுக்கு தற்போது கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.