வாட்ஸ்ஆப் வீடியோ கால் உதவியுடன் பிரசவம் செய்த மருத்துவர்களுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.
வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பிரசவம்! குழந்தை கவலைக்கிடம்! இளம் டாக்டர்களால் விபரீதம்!

கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வரும் ரங்கராஜ், ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி நித்யா, பிரசவத்திற்காக, புலியகுளம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3ம் தேதி நித்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அந்த நேரத்தில், முதன்மை மருத்துவர்கள் மருத்துவமனையில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. உதவி மருத்துவர்கள், வாட்ஸ்ஆப் வீடியோ கால் உதவியுடன், சீனியர்களின் ஆலோசனை பெற்று, பிரசவம் பார்த்துள்ளனர்.
இதன்காரணமாக, நித்யாவிற்கு பிறந்த பெண் குழந்தையின் உடல்நிலை மோசமாக உள்ளதென்று கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதையே காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது, மற்றொரு மருத்துவமனையில் அந்த குழந்தை சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால், குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், கடும் ஆத்திரம் கொண்ட குழந்தையின் உறவினர்கள், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.