டெல்லி தாக்குதல் என்ன சொல்ல வருகிறது..? இஸ்லாமியர்கள் இனி இரண்டாம்தர குடிமக்களா..?

இதுவரை அமைதியாகப் போராடி வந்த முஸ்லிம்களுக்கு எதிராக திடீரென போராட்டம் வேகமெடுத்துள்ளது.


இந்தத் தாக்குதலை யார் நடத்துகிறார்கள் என்பதை வெளியிட யாருக்கும் தைரியம் இல்லை. இதுகுறித்து டாக்டர் ருத்ரன் பதிவில் இருக்கும் தகவல் இது. குடியுரிமைப் பதிவேடு அமலுக்கு வருவதற்கு முன்னரே, முஸ்லிம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக்கப் படுவதைப் பார்க்கிறோம். ஆம். பார்க்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்தர குடிமக்கள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்போர், இரண்டாந்தரத்தினர் தாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக நீட்டப்படும் துப்பாக்கி, உங்களையும் குறி வைக்குமுன் விழித்துக் கொள்ளுங்கள். இத்தனை நாட்களாக முஸ்லிம் மக்கள் நடத்திய போராட்டம், அவர்களுக்கானது மட்டுமல்ல, போராடத்தவறிய பெரும்பான்மையினருக்கானதும்தான். அவர்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும்.

டில்லி வேறு, தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம். ஜல்லிக்கட்டுக்கு திருவிழாக் கூட்டம் போல கூடிய "தமிழர்கள்", வண்ணாரப் பேட்டைக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் திரள மறுப்பது ஏன்? போராடும் இசுலாமியர்கள் "தமிழர்கள்" இல்லையா? உரையாற்றி கடக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தொண்டர்கள் கூட ஏன் போராட்டத்தில் அமர்வதில்லை?

"ஷாகின் பாக்" ஏன் இசுலாமியர் பகுதிகளில் மாத்திரமே நடக்க வேண்டும்?மந்தைவெளியிலும், வியாசர்பாடியிலும் இந்துத் தமிழர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் உணர்வு எது? தில்லியில் நிகழ்ந்தவற்றுக்கு எதிராக வழக்கம் போல அறிக்கைகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நிகழும்.

அவ்வாறு வழக்கங்களில் நின்று சற்றே எட்டி நிற்பதன் பொருள், வழக்கம் போல இசுலாமியர்கள் தனித்து விடப்படுவதாகவே இருக்கும். ஆர்.எஸ்.எஸ் கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கும் கதையாடலுக்கும், அதன் மூலம் "கலவரங்களை" நிகழ்த்துவதற்கும் பொருத்தமானதாக மாறும்.

தில்லியில் நிகழ்ந்தது தமிழகத்தில் நிகழாமல் இருக்க வேண்டுமானால், இசுலாமியரல்லாத மக்கள் போராட்டத்தில் இணைவதன் மூலமாகவே நிகழும். பக்ரீத்துக்கும், ரம்ஜானுக்கும் பிரியாணி மீம் போடுவது, "மாமா-மச்சான்" உறவை சிலாகிப்பது என வழக்கமான ஜல்லிகளின் மூலம் காவி வெறியை எதிர்கொள்ள முடியாது என்கிறது அந்தப் பதிவு.