லத்தியால் விளாசிய போலீஸ்! கத்தியெடுத்த டிரைவர்! நடுரோட்டில் பரபரப்பு!

டெல்லி: டெம்போ டிரைவர் ஒருவரும், டெல்லி போலீசாரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.


டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை டெம்போ டிரைவர் ஒருவர் அவ்வழியே வந்த போலீஸ் வாகனத்திற்கு இடம் தராமல் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்போது, இரு வாகனங்களும் மோதி விபத்திற்குள்ளாகின. ஆனால், அந்த டெம்போ டிரைவர் திடீரென கையில் கத்தியை எடுத்துக் கொண்டு, கீழே இறங்கியதும் போலீசார் தலையில் வெட்டி காயப்படுத்தியுள்ளார். 

உடனடியாக, அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார், அவரையும், அவரது மகனையும் லத்தியால் அடித்து துவம்சம் செய்தனர். போலீசார் லத்தியை காட்டவும், அந்த நபர் கத்தியை காட்டவும் நீண்ட நேரம் இந்த தெருச்சண்டை நடந்துள்ளது. இது சாதாரண விசயமாக இருந்தாலும், போலீசார் வரம்பு மீறி, அந்த நபருடன் சண்டையிட்டனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிரவே தற்போது அது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் டெல்லி போலீசாரின் வன்முறை செயலால் அதிர்ச்சி அடைந்தனர். பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது.

இநிலையில், பணியின்போது தேவையின்றி பொதுமக்கள் மீது வரம்பு மீறி வன்முறையை உபயோகித்த 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், சம்பந்தப்பட்ட டெம்போ டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க, போலீசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.