காதலியின் உடலை 8 துண்டுகளாக்கி அறுத்து வீசிய கொடூரன்! பிறகு கிடைத்த தரமான தண்டனை!

டெல்லியில் காதலியைக் கொன்று தலையை மறைத்துவிட்டு உடலை 8 துண்டுகளாக அறுத்து வீசிய காதலனுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 2012-ஆம் ஆண்டு போலீசார் ரோந்து  சுற்றி வந்தபோது கழிவுநீர் கால்வாய் ஒன்றின் அருகே மனித உடல் துண்டுகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடல் துண்டுகளை சேகரித்துச் சேர்த்த போது அந்த உடல் 8 துண்டுகளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த உடலின் வலது கையில் மூன்று இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்ததைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை ஆய்வு செய்த போது ஒரு  பெண் காணாமல் போனதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்ததும், அந்தப் பெண்ணுக்கும் வலது கையில் மூன்று இடங்களில் பச்சை அடையாளம் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் வழக்கு தொடர்பான விவரங்களை செய்தித் தாள் மூலம் பார்த்த ஒரு பெண், இறந்த பெண்ணின் பச்சை குத்தப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் அது  தனது மகள்தான் என அடையாளம் காட்டினார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது இறந்த பெண் யோகேஷ் யாதவ் என்ற நபரை காதலித்தது தெரியவந்தது.

மேலும் அந்தப் பெண் காணாமல் போனதாக  யோகேஷ் யாதவ் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து யோகேஷ் யாதவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவன் தடுமாற்றத்துடனும் முன்னுக்குப் பின் முரணாகவும் பதில் அளித்ததையடுத்து போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணையைத் தொடர்ந்தனர். 

அப்போது அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை குத்திக் கொன்றதையும் வினய் என்ற நபரின் உதவியுடன்  தலையை வெட்டி கண்காணாத இடத்தில் வீசி விட்டு உடலை 8 துண்டுகளாக்கி வீசியதையும் ஒப்புக் கொண்டான் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் யோகேஷ் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும், வினய்க்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.