இளம் பெண் மருத்துவர் தான் பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல மருத்துவமனைக்குள் பிரபல மருத்துவர் மர்ம மரணம்! கொலை என உறவினர்கள் பகீர் புகார்!

மேற்கு டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் தம்பதி உதய் திங்காரா - அஸ்தா முஞ்சால். இருவரும் வேறுவேறு மருத்துவமனைகளில் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பணிக்குச் சென்ற அஸ்தா முஞ்சால் மறுநாள் காலை 6 மணியளவில் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் பெண் மருத்துவரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் நள்ளிரவு 12.15 மணி வரை அஸ்தா வேலை பார்த்துக்கொண்டிருந்ததும், 12.18 மணிக்கு மருத்துவர்கள் அறைக்குள் நுழைவதும் தெரியவந்தது.
இந்நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு ஒருவர் அஸ்தா இருந்த அறையின் கதவைத் தட்டுவதும், ஆனால் திறக்கப்படாத நிலையில் பாதுகாவலர்கள் 5.15 மணிக்கு கதவை உடைத்து திறப்பதுமான காட்சிகல் சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தன.
மேலும் அஸ்தா உடலின் அருகே ஒரு ஊசி கிடந்ததோடு அவரது உடலில் ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளமும் இருந்தது.மருத்துவமனையில் சில முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்க்கு எதிராக அஸ்தா குரல் கொடுத்து வந்தநிலையில் அவர் மர்மமான முறையில் மரண அடைந்திருப்பதாகவும், எனவே முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அஸ்தாவின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அஸ்தா இறந்து கிடந்த அறையில் இரண்டு கதவுகள் உள்ளன. சி.சி.டி.வி. இருந்த பக்கம் பாதுகாவலர்கள் கதவை உடைத்துக் கொண்டு சென்ற நிலையில் மற்றொரு புறம் வழியாக என்ன நடந்தது எனத் தெரியாத நிலையில் அஸ்தாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கல் எழுந்துள்ளன.