அடுத்தடுத்து ஷட்டர் போடப்படும் கார் சர்வீஸ் சென்டர்கள்! ஒரே நாளில் வேலை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்!

டெல்லி: இந்தியா முழுவதும் கார் ஷோ ரூம்கள் படிப்படியாக மூடப்பட்டு வருவதால், பலரும் வேலையிழந்து வருகிறார்கள்.


சர்வதேச ஆட்டொமொபைல் சந்தையில் முக்கிய பங்களிப்பு செய்யும் இந்தியாவில் தற்போது கார் விற்பனை படிப்படியாக சரிவடைய தொடங்கியுள்ளது. இதில், முன்னணி கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி இந்தியாவின் விற்பனை 40 சதவீதம் வரை சரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கார் கையிருப்பு அதிகரித்துள்ளதால், கார் உற்பத்தியை மாருதி சுசூகி இந்தியா குறைக்க தொடங்கியுள்ளது. தற்சமயம், ஒரு ஷிப்ட் மட்டுமே கார் உற்பத்தி நடைபெறுகிறது. 

இதேபோல, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், மஹிந்திரா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் கார் விற்பனையும் கணிசமான அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதனால், இந்த நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை குறைத்து, ஆட்குறைப்பு செய்ய தொடங்கியுள்ளன. 

குறிப்பாக, நிஸான் நிறுவனம் சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதவிர, அதன் டீலர்களும் விற்பனை சரிவை சந்தித்துள்ளதால், ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளனர்.  

இந்நிறுவனங்களின் கார்களை விற்கும் ஷோ ரூம்களும் படிப்படியாக மூடுவிழா நடத்த தொடங்கியுள்ளன. இப்படியாக, கார் உற்பத்தி, விற்பனை என அனைத்துத் துறைகளும் ஒரே நேரத்தில் மந்த நிலை நிலவுவதால்,  இந்திய அளவில் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த மந்த நிலைக்கு காரணமாக உள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.