இயக்குனர் கவுதம் வாசுதேவனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

தங்களுடைய அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, தொலைக்காட்சி தொடராவகோ எடுக்கக் கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். 

75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதாக கேட்ட செய்தி 1.5 கோடி அதிமுக தொண்டர்களையும், 6 கோடி தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.

இதை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற பெயரில் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் வெப்சீரிஸ் தயாரிக்க உள்ளார்.  

இது குறித்து பேட்டி அளித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அத்தையின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் படமாகவோ, சீரியலாகவோ எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் எடுக்க ஏற்கனவே இயக்குநர் விஜய் தன்னிடம் அனுமதி வாங்கியுள்ளதாக தீபக் தெரிவித்தார்.

மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எடுப்பதாகவும் கதையை திரித்து எடுக்கமாட்டேன் என இயக்குநர் விஜய் உறுதி அளித்துள்ளதாகவும் தீபக் தெரிவித்துள்ளார்.

தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் தயாரிக்கும் குயின் என்ற வெப்சீரிஸ் தன்னுடைய அத்தையின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பதாக கேள்விபட்டிருப்பதாக கூறிய தீபக் எங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.