திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இறப்புச் சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்ததால் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார் கிராம நிர்வாக அலுவலர்.
டெத் சர்டிபிகேட் லேட்! தந்தையை இழந்த மகன் காலில் விழுந்த பெண் விஏஓ! நெகிழ வைத்த சம்பவம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரேஷ், அவரது தந்தை கடந்த சில மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். இந்நிலையில் சுந்தரேஷ் பல்லடம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஒரு மாத காலம் ஆகியும் இறப்புச் சான்றிதழ் கொடுக்காத நிலையில் சுந்தரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கிராம நிர்வாக அலுவலரை இடைத்தரகர் மூலமே பார்க்க முடியும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டம் கூடவே பிரச்சனை பெரிதாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி சுந்தரேசின் காலில் விழுந்து போராட்டத்தை கைவிடும்படி மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு கூடிய விரைவில் இறப்பு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறிய பிறகே போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கூட்டம் கலைந்து சென்றது.